நான் எழுதுகிறேன்.. மகன் அல்லது மகள் காதலை அறிந்த தருணம்காதல் தவறல்ல!


காதலுக்கு எங்க வீட்ல செம மரியாதை..என் வீட்டில் மூன்று குழந்தைகளுக்கு காதல் திருமணமாச்சே!

என் பெண் மும்பையில் டாக்டருக்கு படித்தபோது சீனியர் மாணவனைக் காதலித்தாள். அவன் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். பையன் பரமசாது. (இப்பவும் இவள்தான் அவனை விரட்டிக் கொண்டிருக்கிறாள்!) ரொம்ப மரியாதை. வீட்டுக்கு அடிக்கடி வருவான். எங்களை அம்மா அப்பா என்றுதான் கூப்பிடு
வான். என் பிள்ளைகளுக்கும் அவனைப் பிடித்துவிட, அவன் பெற்றோரும் சம்மதிக்க எங்கள் முறையிலும், அவர்கள் முறையிலும் ஜோராக திருமணம் நடத்தினோம்.

இரண்டு குழந்தைகள்.
இன்றுவரை மிக அருமையாக குடும்பம் நடத்தி நல்ல மருமகள் என பெயர் வாங்கி விட்டாள். அவள் மாமனார் மாமியார் அவளுடன்தான் இருக்கிறார்கள். 'உங்கள் பெண்ணை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்' என்பார் அவள் மாமியார். அவருக்கு தமிழும் எனக்கு மராட்டியும் பேசத் தெரியாது ஹிந்தியில் நேரம் போவது தெரியாமல் பேசுவோம்!


என் முதல் மகன் ஜெர்மனியில் கணினித் துறையில் பணி புரிந்து வருகிறான். அவனுக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது, ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணை தான் காதலிப்பதாகச் சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. மாப்பிள்ளையாவது நம்ம நாட்டு பையன்! இவள் வெளிநாடு.  'அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று நான் மறுத்தேன். ஆனால், என் கணவரும் மற்ற பிள்ளைகளும் அவனுக்கு முழு சப்போர்ட்.

'நீ அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் மாறி விடுவாய். உன்னுடைய குணங்கள், செயல் முறைகள் எல்லாம் அவளிடமும் இருக்கிறது அம்மா! உனக்கு அவளை ரொம்பப் பிடித்துவிடும்' என்று எனக்கு டன் டன்னாக ஐஸ் வைத்தான்.

அதோடு விடாமல் வெப்காமில் அவளைக் காட்டினான். பளிச்சென்று இருந்தாள். 'ஹலோ அம்மா! செளக்கியமா?' என்று அழகாகத் தமிழில் கேட்டாள். மறுத்துச் சொன்ன நானே என் கணவருடன் தாலி, புடவை சகிதம் ஜெர்மனி சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.


என் இரண்டாவது மகனின் திருமணத்திற்கு (இந்த மருமகள் நான் பார்த்து திருமணம் செய்தவள்) வந்திருந்தபோது அவள் எங்களிடம் பழகிய விதமும், அவளுடைய பண்பும், அன்பும் நல்ல பெண்தான் மருமகளாக வந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தோம்.

திருமணத்தில் வேளைக்கு ஒரு புடவை கட்டி, தலை நிறைய பூ, கை நிறைய வளையல், விதவிதமாய்
நகைகள் போட்டு அவள் அசத்தியதைப் பார்த்து திருமண வீடே அதிசயப்பட்டுப் போனது!

எனக்கு உதவியாக வீட்டு வேலைகளை அழகாகப் புரிந்து கொண்டு என்னோடு செய்வது, வேலைக்காரியிடம் கூட அன்பாகச் சிரித்துப் பேசுவது, என் பெண்ணிடமும் மற்ற பிள்ளைகளிடமும் பாசமாக நடந்து கொள்வது என எல்லாவற்றையும் பார்த்துப் பூரித்துப் போனேன்.

என் மகனிடமும் அதைச் சொல்லி மனமார அவளைப் பாராட்டினேன். "அப்படின்னா என் செலக்க்ஷன் ஓ.கே. தானேம்மா" என்று கேட்டுச் சிரித்தான்.

சென்ற ஆண்டு இங்கு வந்தபோது எங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு குடந்தை அருகில் கிராமத்திற்கு சென்றி
ருந்தோம். எங்கள் உறவினர்
களுடன் அன்பாகப் பழகி என் பிள்ளையுடன் சேர்ந்து நமஸ்காரம் செய்து மரியாதையோடு நடந்து கொண்டதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமாகி
விட்டனர்.


என் மகனிடம் அவள் காட்டும் பிரியமும், மரியாதையும் அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யும் பாங்கும், திருமணமாகி 15 வருடங்களாகியும் மாறாதது நான் ஆச்சரியப்படும் விஷயம்.

என் கடைசி பிள்ளை சிங்கப்பூரில் வேலையில் இருந்தான். என் மூன்றாம் மருமகள் அயர்லாந்து பெண். பெரிய பிள்ளை வெப்காமில் காட்டி பெண் எப்படி என்றான்! இவனோ சென்னைக்கு வீட்டிற்கே அவளை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான்!

அவளும் எங்கள் குடும்பத்தில் மிகவும் ஒன்றி மிக அன்பாக நடந்து கொள்வாள். அவர்கள் தம் குழந்தைகளிடம் கூட கடினமாகப் பேசாமல் பொறுமையாகப் பேசுவதும்,ஒவ்வொரு முறையும் thanks சொல்வதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள்.


அவள் Engineer  மற்றும் Physiotherapist. அவளுக்கு தமிழ்த் தோழிகள் நிறைய உண்டு. இரண்டு முறை இந்தியாவிற்கு வந்தவளுக்கு இந்தியாவோடு ஒரு இந்தியன் மீதும் காதல் வந்து விட்டதாக சொன்னாள்! முதல்முறை வந்தபோதே எங்கள் எல்லோருடனும் மிக சகஜமாக பேசி பழகியதுடன் வற்றல்குழம்பு, உருளை ரோஸ்ட் எல்லாம் ரசித்து சாப்பிட்டாள்! சிங்கப்பூரில் திருமணம் நடந்தது. தற்போது லண்டனில் இருக்கிறார்கள்.

நம் குழந்தைகள் நம்மிடமிருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் நம் இஷ்டப்படி நடக்க வேண்டும் என நாம் நினைப்பது தவறு.  ஒவ்வொருவருக்கும் தனியான எண்ணங்கள் ஆசைகள் உண்டு. அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதில் தவறு என்ன?

எல்லா மனிதர்களிடமும் தனிப்பட்ட சிறப்பான குணங்கள் உண்டு. அதில் ஈர்ப்பு ஏற்படும் போதுதானே இருவருக்குள் காதல் ஏற்படுகிறது. ஒருவருக்
கொருவர் குறை கூறிக் கொள்ளாமல், சந்தோஷமோ, துக்கமோ இருவரும் இணைந்து அதனை அனுபவிப்போம் என்ற எண்ணம் இருந்தாலே காலம் முழுதும் இணைந்து இன்பமாக வாழ முடியும். இதில் ஜாதிமத வேறுபாட்டுக்கு இடமில்லை.

நாமெல்லாம் கணவன்/மனைவி வேறுபட்ட எண்ணங்களோடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தோம்/வாழ்கிறோம். இன்றைய இளைய தலைமுறை அப்படி இல்லை.நிறைய யோசித்து முடிவெடுத்து சிறப்பாகவும் வாழ்கிறார்கள். நாம் அந்த நாளைய விஷயங்களைக் கூறி அதன்படி அவர்களை நடக்கச் சொல்வதால் நமக்குள் மனவேற்றுமைதான் வரும்.

வாழ்க்கை வாழ்வது ஒருமுறை. அதை தம் விருப்பத்திற்கு சந்தோஷமாக வாழ ஆசைப்
படுகிறார்கள். இதில் என்ன தவறு? பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே இன்று டைவர்ஸில் முடிகிறதே.

'உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று சுலபமாக சொல்லிவிடலாம். இன்று நமக்கு ஆதரவாகப் பேசும் உறவும் நட்பும் நாளை நமக்கு கஷ்டம் வரும்போது கண்டுகொள்ள மாட்டார்கள்.

என் பிள்ளைகள் காதலித்த
போதும் நானும் என் கணவரும் இதையெல்லாம் யோசித்தோம். அவர்களுக்கும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் உறுதியாக இருந்ததாலேயே திருமணத்திற்கு சம்மதித்தோம். இன்றுவரை அவர்கள் எங்களுடன் பாசமாக இருப்பதுடன், அவர்களும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாய் வாழ்வதும் சந்தோஷமாக இருக்கிறது.

இன்று கூட்டுக் குடும்பங்கள் சாத்தியம் இல்லை.
இக்காலத்தில் அவரவர் வாழ்க்கையை தம் இஷ்டப்படி வாழவே அனைவரும் விரும்புகின்றனர். வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைகளும், வாழ்க்கை அனுபவங்களையும் இந்தத் தலைமுறையினர் கேட்டு நடக்க விரும்புவதில்லை. இன்றும் சில கூட்டுக்குடும்பங்கள் சிறப்பாக வாழ்வது பாராட்டத் தக்கது.

பெரும்பாலான  இளைய தலைமுறையினர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் பெரியவர்களும் வேலை ஓய்வு பெற்றபின் பொறுப்புகளி
லிருந்து விலகி அவரவர் விருப்பப்படி வாழ ஆசைப்படுகிறார்கள். இன்று Senior Citizen Homes அதிகமாயிருப்பதன் காரணம் இதுதான். நாம் சம்பாதிக்கும் காலத்திலேயே நமக்காக என்று பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. வயது முதிர்ந்தபின் குழந்தைகளை எதிர்பார்த்து இருக்க வேண்டாம்.

நாங்களும் நமக்கென்று பூஜை ஆலயதரிசனம் என்ற ஒரு  வாழ்க்கை தேவை என்று தோன்ற, கடந்த எட்டு வருடங்களாக தனிக்
குடித்தனம்!

அவ்வப்போது பெண் பிள்ளைகள் இருக்கும் ஊருக்கு சென்று தங்கிவிட்டு வருவோம். இதனால் நமக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் அதிகமாகிறது. முக்கியமாக பேரன் பேத்திகள் நம்மோடு இருந்து மகிழ ஆசைப்படுகிறார்கள்.
ராதாபாலு

கருத்துகள்