அப்பா ஒரு அன்புருவம்

 


அப்பா பற்றி ஏற்கெனவே நான் எழுதிய பதிவின் லிங்க்👇


https://www.momspresso.com/parenting/5cf806fbf84b4c089444565607326d1d/article/na-n-ezhutukire-nappa-i6xv5hzcawlf

அப்பா என்றாலே ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் மனதில் வந்து உட்காருகிறது. ஒவ்வொரு தலைமுறை அப்பாக்களில் வித்யாசம் இருந்தாலும் அவர்களின் பாசத்தில் அப்பழுக்கிருக்காது. குடிசையோ கோபுரமோ அப்பாவின் அன்பு வெளிக் காட்டாவிட்டாலும்  அளவில்லாதது.

முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்தி
ருக்கிறேன்.

என் அப்பா நான் ஒரே பெண் என்பதால் என் தம்பிகளிடம் காட்டிய கண்டிப்பு என்னிடம் கிடையாது. அந்தக் கால typical அப்பா. பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போகவும் பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்! ஆனால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை..தேவையானவற்றுக்கு மறுப்பு சொன்ன
தில்லை.

மாதம் ஒருமுறை பீச், எக்ஸிபிஷன், பாட்டுக் கச்சேரி, நல்ல சினிமாக்கள், ஏப்ரல் மாத விடுமுறையில் சுற்றுப் பயணம் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.தன் குழந்தைகள் எல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பாவிற்கு நிறைய உண்டு.

சென்னையில் 1968ல் World Trade Fair Exhibition மிக பிரம்மாண்டமாய் நடந்தது. அதில் உலகின் அத்தனை நாடுகளைப் பற்றிய விபரங்கள் அவற்றிற்கான ஸ்டாலீகளில் இருக்கும். நாங்கள் எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டு முறை அழைத்துச் சென்று அத்தனையும் சுற்றிப் பார்த்தோம். அந்த எக்ஸிபிஷன் நடந்த இடம்தான் இன்றைய அண்ணாநகர் பகுதி.

என் திருமணத்தின்போது அப்பாவின் மடியில் அமர்ந்து திருமாங்கல்ய தாரணம் நடந்தபோது என் அப்பா தேம்பி அழுததாக என் கணவர் இன்றும் சொல்வார்.நான் புக்ககம் கிளம்பும்போது அப்பா என் முகத்தை பார்க்கவே இல்லை.

நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் settle  ஆனபின் அப்பாவின்...தான் சாதித்து விட்டோம். குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்...என்ற சந்தோஷத்தைப் புரிந்து கொண்டேன்.


நான் பிரசவத்திற்கு போகும்போதெல்லாம் எனக்கு பிடித்ததெல்லாம் வாங்கி வந்து தருவார். என் அம்மா ஏதாவது வேலை சொன்னாலும்
..அவளை வேலை செய்ய சொல்லாதே. நான் செய்கிறேன்..என்று சொல்வார்.

அவருக்கு நான் ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்று கேட்டால்..எனக்கு எதுவும் வேண்டாம். நீ நன்றாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சி..என்பார். நான்  ஒருமுறை வேஷ்டியும் சட்டையும் வாங்கிக் கொடுத்தபோது மிக சந்தோஷமாக அவற்றை அணிந்து கொண்டார்.

நான் அவரைப் பிரிந்தது திருமணத்திற்கு பின்பு மட்டுமே. அப்பொழுது ஃபோன் வசதி இல்லாத காலம். கடிதங்களில் மட்டுமே அன்பைப் பகிர முடியும். என் அப்பா அடிக்கடி என்னை நினைத்து கண்கலங்குவதாக அம்மா எழுதுவார். அம்மா மறைந்தபின்பு அப்பா எனக்கு எழுதிய கடிதத்தை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

நான் வெளிநாடுகளுக்கு சென்று வரும்போது அவருக்கு பிடித்த சாக்லேட்டுகள் வாங்கி வருவேன். அவற்றை ரசித்து சாப்பிடுவார். நான் லண்டன் சென்று வந்தபோது..லண்டன் ரொம்ப அழகா இருக்குமாமே. அப்படியா?..என்று ஆர்வமாகக் கேட்டு புகைப்படங்களை ரசித்துப் பார்த்தார்.

நான் எழுதும் கட்டுரைகள் புத்தகங்களில் வரும்போது தவறாமல் வாங்கி ஒருவரி விடாமல் படித்து பாராட்டுவார். என் மகன் +2வில் மாநில முதலிடம் பெற்று மாருதிகார் பரிசு வாங்கினான். அதில் அவரை அழைத்துச் சென்றபோது கண்கலங்கி விட்டார். கார் என்பதையே நினைத்துப் பார்க்க முடியாத நடுத்தர குடும்பத்தில் என் மகன் பரிசாக கார் பெற்றதை பார்த்தவர்களிடமெல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டார்.

என் அப்பாவின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் இருந்தபோது 22 நாட்கள் நான் உடனிருந்து பணிவிடை செய்ததை என் பாக்யமாகக் கருதுகிறேன். தினமும் ஏதாவது பழைய சம்பவங்களைப் பற்றிப் பேசுவார். அவர் குணமடைந்து விடுவார் என்று எண்ணியிருந்த எங்களை விட்டுவிட்டு மறைந்து விட்டார். என் மணநாள் அன்று அப்பா மறைந்தது சொல்ல முடியாத வருத்தம். இன்றும் அப்பா என்கிறபோது ஏற்படும் வாஞ்சை என்றும் மனதில் நிற்கிறது. அப்பாவுக்கு நிகர் அவரே🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு