இரவல் வாங்கிய தலைப்பு ....தியாக பூமி



நான்எழுதுகிறேன்...சவால்

இரவல் வாங்கிய தலைப்பு
....தியாக பூமி

எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் என் அம்மா. அதன் பின்னும் என்னை பத்திரிகைகளில் எழுதவும் ஊக்கம் தந்தவர் என் தாயே!

நான் ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனையும், வியாசர் விருந்தையும் பலமுறை படித்திருக்கிறேன். நாவலாக நான் படித்த முதல் புத்தகம் கல்கி அவர்களின் தியாக பூமி. பலமுறை படித்தும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான கதை.

சமூக நாவலாக அந்நாளைய பெண்களின் நிலையை மிக அழகாக எடுத்துக் காட்டிய புரட்சியான நாவல் என்பேன். பெண் விடுதலையை 1936ம் ஆண்டிலேயே மிக அழகாக நாசூக்காக எழுதியுள்ளார் கல்கி. இது திரைப்படமாக வந்து பலநாள் ஓடியது.

ஒரு பெண்ணின் மனதை மிக அழகாக எழுதியிருப்பார்.பல இடங்கள் கண்ணில் நீரை வரவழைக்கும். இறுதி முடிவுதான் வித்யாசமானது. ஆணுக்குப்
பெண் அடிமை இல்லை என்பதை மிக அழகாக,அழுத்தமாக எடுத்துச் சொன்ன நாவல் இது. அதே  கருத்தை ஆதாரமாகக் கொண்டு நான் எழுதிய கதை.

ராமநாதன் தன் ஒரே மகள் ரஞ்சனியை சீரோடும் சிறப்போடும் டில்லியில் பணிபுரியும் ஆனந்திற்கு  திருமணம் செய்து வைக்கிறார். ஆனந்திற்கு நிறைய பெண் நண்பர்கள் உண்டு. அவன் பழக்க வழக்கங்கள் மிக மோசமானவை. எல்லோரையும் போல் ஆங்கிலம் பேச வேண்டும், பார்ட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரஞ்சனியை வற்புறுத்தினான்.

இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் ரஞ்சனி மிக வருந்தினாள். கண்ட பெண்களுடன் அவன் நெருக்கமாகப் பழகுவதும், தொட்டுப் பேசுவதும் அவள் விரும்பவில்லை. தன்னால் முடியாது என்று சொல்லியும் அவன் வற்புறுத்தலுக்காக பார்ட்டிகளுக்கு சென்றாள்.

ஒருமுறை எல்லோரும் கண்டபடி மது அருந்திவிட்டு மயக்கமாகிவிட, வேறொருவர் காரில் வீடு வந்து சேர்ந்தபோது இனி பார்ட்டிகளுக்கு போகக்கூடாது என முடிவு செய்தாள். அவள் மாமியாரிடம் இதைப் பற்றி சொன்னபோது ..இதல்லாம் இங்கு சகஜம்..என்று சொல்லியது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதற்கிடையில் ரஞ்சனி கர்ப்பமாகிவிட, பிரசவத்
திற்காக பிறந்த வீடு வந்தவள், தன் பெற்றோரிடம் தான் இங்கேயே இருந்து விடுவதாக சொல்லி அழுதாள். அவர்களோ..புகுந்தவீட்டில் என்ன கஷ்டம் இருந்தாலும் அங்குதான் வாழ வேண்டும்...என்ற வழக்கமான அறிவுரையை வழங்கினார்கள்.

அழகிய பெண் குழந்தை பிறந்தது. விஷயம் ஆனந்திடம் சொன்னபோது சந்தோஷமான பதில் இல்லாதது ரஞ்சனியின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தது. அவளை டில்லி கொண்டு விடுவதாக சொன்னபோதும் ஆனந்திடமிருந்து சரியான பதில் இல்லை.

அவளுக்கு தெரிந்த பெண் ஒருத்தியிடம் ரஞ்சனி பேசியபோது, ஆனந்தின் அம்மா அவள் பெண் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், அவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருப்
பதாகவும் கூறியது அவளுக்கு பயங்கர அதிர்ச்சியாகி விட்டது.

இனி தன் கதி என்ன என்று யோசித்தாள். வரதட்சணை, நகை என்று ஏகப்பட்ட பணம் செலவழித்து திருமணம் செய்து வைத்த பெற்றோரை நினைத்து மனம் வருந்தியது.தன்னால் அவர்கள் முகத்திலிருந்த சிரிப்பு கூட மறைந்து விட்டது மனதிற்கு கஷ்டமாகி விட்டது.

அச்சமயம் தன் நெருங்கிய தோழி ஸ்வர்ணாவின் நினைவு வந்தது. அவள் திருமணம் செய்து கொள்ளாமல்  ஹைதராபாத் அருகில் ஒரு அனாதை ஆசிரமம் நடத்தி வந்தாள். அங்கு தான் வந்து சேர்ந்து சேவை செய்ய முடியுமா எனக் கேட்டாள் ரஞ்சனி. தோழி இவள் நிலையை அறிந்து மிக மனம் வருந்தினாள். தன்னுடன் இணைந்து உதவுவது தனக்கும் மகிழ்ச்சி என்றாள்.

ஒருநாள் இரவு பெற்றோர் தூங்கியதும்...என்னைத் தேட வேண்டாம்.குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். கொஞ்ச நாளில் வருகிறேன்...என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு ரஞ்சனி கிளம்பிவிட்டாள். அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் குழந்தையின் பிஞ்சு முகம் பார்த்து மகிழ்ந்தார்கள்.

நந்தினியை மிக அருமையாக வளர்த்தார்கள்.எட்டு வருடங்களாக ரஞ்சனியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மகள் என்ன ஆனாளோ என்ற கவலை மனதில் எட்டிப் பார்த்தது. ஆனால் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆசிரமத்தில் ரஞ்சனி பெரும்பாலான பொறுப்புகளைத் தான் ஏற்று நடத்தி வந்தாள். பெற்றோர், குழந்தையின் நினைவு வரும்போதெல்லாம் வலுக்கட்டாயமாக அதை ஒதுக்கி வேலையில் கவனம் செலுத்தினாள்.

அச்சமயம் ஸ்வர்ணா அதிர்ச்சியான ஒரு விஷயத்தை ரஞ்சனியிடம் சொன்னாள்.
...ரஞ்சனி..நான் ஒரு இதய நோயாளி. என் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக டாக்டர் கூறிவிட்டார்.  என் முடிவு எப்பொழுது என்று தெரியாது.எனக்கு யாரும் உறவு கிடையாது. இந்த ஆசிரம உரிமைகளை உன் பெயருக்கு மாற்றுகிறேன். நீதான் எனக்குப் பின் இதை நடத்த வேண்டும்...

...என்ன ஸ்வர்ணா இப்படி சொல்கிறாய். உனக்கு எதுவும் ஆகாது.வருத்தப்படாதே..

...நாளை உன் பெயருக்கு இந்த ஆசிரம ஆவணங்களையும், என் சொத்துகளையும்  மாற்றிவிடுகிறேன். உன் ஈடுபாடும், திறமையும் எனக்கு பிடித்து விட்டது. கடவுள் நல்ல நேரத்தில் உன்னை இங்கு அனுப்பியிருக்கிறார். நீதான் இனி இதன் நிர்வாகி. உன் பெற்றோரையும், குழந்தை
யையும் இங்கு வரச் சொல். இத்தனை நாள் நீ அவர்களைப் பிரிந்து வாழ்ந்தது போதும்..

...எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஸ்வர்ணா...
ரஞ்சனி கண் கலங்கி அழுதாள்.

அடுத்த சில நாட்களில் ஸ்வர்ணாவின் நிலை மோசமாகி இறந்து விட்டாள்.

எட்டு வருடங்களாக உடனிருந்ததால் ஆசிரமம் பற்றிய அனைத்தும் அவளுக்கு தெரியும். தன் குழந்தை எப்படி இருப்பாள் என்ற ஆர்வம் ஏற்பட, முதல் முறையாக அவள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி தன் கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள சொன்னாள்.

அவர்கள் சொன்ன செய்தி அவளை அதிர்ச்சிக்குள்
ளாக்கியது. சில நாட்கள் முன்பு ஆனந்த் வந்ததாகவும், அவன் வேலை போய் தனிமையில் இருப்பதாகவும், அவளுடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் கூறியதைக் கேட்டபோது அவள் உடம்பு கோபத்தில் நடுங்கியது.

..பெண் என்றால் கிள்ளுக் கீரையா? என்னை எவ்வளவு மனக் கஷ்டப் படுத்தினார்கள்? இப்பதான் என் நினைவு வந்ததா? நான் இனி அவனுடன் வாழத் தயாராக இல்லை. நீங்கள் மூவரும் இங்கு கிளம்பி வந்து விடுங்கள். நான் டிக்கெட் அனுப்புகிறேன்...என்றாள்.

அவர்களும் அவள் சொன்னபடி  ஹைதராபாத் வந்தார்கள். நந்தினியைப் பார்த்தவள் அந்தக் குழந்தையின் அழகிலும் சமத்திலும் மனம் கலங்கி அழுது விட்டாள்.

...இனி என்றும் நீ அம்மாவுடன் இருக்கலாம். நிறைய படித்து உனக்கு பிடித்த  வேலைக்கு போகலாம்...என்று கட்டயணைத்து முத்தமிட்டாள். அவள் பாசத்தைப் பார்த்த பெற்றோரின் கண்கள் கலங்கி விட்டன. திருமண வாழ்க்கை வெற்றி பெறாமல் அவள் எவ்வளவு கலங்கியிருப்பாள் என்ற எண்ணம் எழுந்தது.

...அம்மா அப்பா இனி நீங்களும் இங்கு இருக்கலாம். அப்பாதான் இனி என் அக்கவுண்டன்ட். இந்த சேவை மகத்தானது. நாம் இணைந்து இதில் ஈடுபட்டு, என் தோழியின் ஆசையை நிறைவேற்றுவோம்...
என்றவளை ஆசிரம வாயிலில் இருந்த தொட்டிலில் கிடந்த குழந்தையின் அழுகை சத்தம் கலைக்க, வெளியில் சென்று பார்த்தார்கள். ஒரு அழகிய பெண் குழந்தையைத் தூக்கியவள் முத்தமிட்டு
...அம்மா. இனி நீதான் இவளை வளர்க்கப் போகிறாய்...என்றபடி  குழந்தையைத் தாயிடம் கொடுத்தாள்.

பெண்களின் தியாகம் தான் நம் பாரத பூமியின் சிறப்பான பொக்கிஷங்கள்! வாழ்க பாரதம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)