அப்பா...
அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது! இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்தி
ருக்கிறேன்.
சிறு வயதில் அவர் என் கைப்பிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்!
எனக்குத் திருமணம் நடந்த அன்று, அவர் மடியில் அமர்ந்து எனக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தபோது என் அப்பா கண் கலங்கி அழுதது இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அதை நினைக்கும்போது இன்றும் என் கண்கள் கண்ணீரால் நிறைகிறது.
பிள்ளைகளிடம் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தந்தைகள்,
பெற்ற பெண்ணிடம் சற்று விட்டுக் கொடுத்துப் போவது எனக்கு மட்டுமல்ல.. பல பெண்களின் அனுபவமாக இருக்கும். பாசத்தில் பாரபட்சமா? இல்லை...அது ஒரு தனிப்பட்ட அன்பு எனலாம்.
நான் ஒரே பெண் என்பதால் அப்பாவுக்கு இத்தனை பாசமா என்று நான் நினைப்பதுண்டு. என் அம்மாவுடன் நான்கு பெண்கள் என் தாத்தாவிற்கு. நான்கு பெண்களிடமும் அவருக்கு தனிப்பட்ட பாசம் உண்டு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். பல பெண்களும் அம்மாவைவிட அப்பா செல்லமாக இருப்பதைக் காணலாம்!
அம்மா என்கிறபோது உருகும் மனம், அப்பா எனும்போது ஒரு அதீதமான வாஞ்சையை அனுபவிப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
என் அப்பாவின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்த்திருந்த போது,கிட்டத்தட்ட 22 நாட்கள் அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்தது என்னால் மறக்க முடியாத நாட்கள். இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை இன்றும் சிறப்பாக வாழவைப்பதை உணர்கிறேன்.
ஒரு தந்தையைப் பற்றிய எண்ணங்கள்...
#6வயதில் ...
'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும். அவர்தான் உலகமே...'
#8வயதில் ...
'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை.அவருக்கு ஈடு இணை யாருமில்லை..'
#10வயதில்...
'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் அடிக்கடி கோபிக்கிறார்...'
#15வயதில்...
'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.இப்போ மாறிவிட்டார்..'
#18வயதில் ...
'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை. சரியான பழம்பஞ்சாங்கம்!...'
#20வயதில்...
'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்வதில்லை...'
#23வயதில்...
'சே! அப்பாவின் செயல்,பேச்சு எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?'
#25வயதில்...
'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்மறையாகவே பேசுகிறார். உலகம் புரியாதவர்...'
#30வயதில்...
'ஹ்ம்ம்..என் மகன்/ள் நான் சொல்வதைக் கேட்பதேயில்லை. நான் சின்ன வயதில் என் அப்பாவுக்கு ரொம்பவே பயப்படுவேன்..'
#40வயதில்..
'என் அப்பா எங்களை மிக ஒழுக்கத்துடன் வளர்த்தார். அந்தப் புரியாத வயதில் அவர் எப்படி எங்களை மிகச் சரியாக வளர்த்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியம்தான்!..'
#50வயதில்...
'நாங்கள் நான்கு சகோதர சகோதரிகள்..எங்களை வளர்க்க எங்கள் அப்பா ரொம்பவே கஷ்டப் பட்டதை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு மகனை/ளையே இன்று வளர்ப்பது கடினமாக உள்ளது.'
#55வயதில்...
'என் அப்பா மிகவும் முன்யோசனையுடன்,திட்டமிட்டு எங்களை நல்ல விதமாக உருவாக்கினார். இன்றும் இந்த வயதிலும்,தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு, எந்த கடினமான சூழ்நிலை
யையும் சமாளிக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். அது அவரின் மிகச் சிறந்த குணம்.
மொத்தத்தில் என் அப்பா மிக மிக அன்பானவர்..
உயர்ந்தவர்...சிறந்தவர்...
அவருக்கு நிகர் அவரே🙏
கருத்துகள்
கருத்துரையிடுக