எங்கள் கருத்து உங்கள் எழுத்து.
பிரசவத்தின்போது உடன் இருந்தவர்களுக்கு நன்றி கூறல்.

இன்னொரு தாய்..!

நாங்கள் கரூரில் இருந்தபோது எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க உதவியாக அறிமுகமானார் சீதாலக்ஷ்மி மாமி. வந்த நாள் முதலே எங்களுடன்  ஏதோ போன ஜென்ம பந்தம் போல் மிகவும் ஒன்றிவிட்டார். என் அம்மாவை சொந்தப் பெண்ணாக எண்ணி நடந்து கொள்வார்.என் அம்மாவும் சிறு வயதில் தாயை இழந்ததால் அவரை அம்மா போன்றே பாசத்துடன் இருப்பார்.

கரூரிலிருந்து என் அப்பாவுக்கு முசிறி மாற்றலாகியது. அங்குதான் என் திருமணம் நடைபெற்றது. மாமி ஒருவாரம் முன்பே வந்து கல்யாண சீர்முறுக்கு பட்சணமெல்லாம் தானே செய்தார். சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தானே பார்த்துக் கொண்டதால் அம்மாவுக்கு வெளிவேலைகள் செய்வது சுலபமாயிற்று. திருமணம் முடிந்தும் சில நாட்கள் இருந்துவிட்டே சென்றார்.

திருமணமாகி இரண்டு வருடம் கழிந்ததும் நான் பிரசவத்திற்காக என் பெற்றோர் இருந்த நாகர்கோவிலுக்கு வந்தேன். 'என் பேத்தி பிரசவத்திற்கு நான்தான் வந்து செய்வேன்' என்று நான் சென்ற அடுத்தவாரமே வந்துவிட்டார்.சிரிக்க சிரிக்கப்பேசிக் கொண்டு,  மாமாவுடன் அந்யோன்யமாக இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்லி'அப்படிதான் வாழ வேண்டும். இதை சொல்வதில் என்ன வெட்கம்' என்பார்!  

எனக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது, பிரசவம் சுலபமாக இருக்க  கஷாயம், பூண்டு மருந்து எல்லாம் செய்து கையில் கொடுத்து சாப்பிட சொல்வார். என் அப்பா மற்றும் தம்பிகளை கவனிக்கவே அம்மாவுக்கு நேரம் சரியாயிருக்கும் என்பதால் என் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலையின்றி 'மாமி பார்த்துக் கொள்வார்' என்ற நம்பிக்கையில் இருப்பார்.

எனக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து விட  பிரசவம் ஆயுதகேஸ் ஆகிவிட்டது. ஏகப்பட்ட தையல்கள். நடக்க முடியவில்லை. மாமிதான் என்னுடன் ஆஸ்பத்திரியில் பத்து நாளும் உடனிருந்து பார்த்துக் கொண்டார்.

என்னை சிறிதும் அசைய விடமாட்டார். குழந்தையை எடுத்துக் கொடுப்பது, குளிப்பாட்டி விடுவது எல்லாம் தான்தான் செய்வார். 'பச்சை உடம்பு. ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு ஏதாவது வந்தால் குழந்தைக்கும் உடம்பை படுத்துண்டி' என்பார்.

அந்த நாளில் sanitary napkin எல்லாம் கிடையாது. துணியை கிழித்து வைத்துக் கொண்டு துவைத்து உலர்த்தி மீண்டும் உபயோகிப்போம். மாதவிலக்கு நாட்களிலும் அப்படியே. அந்தக்கால பெண்களுக்கு தெரிந்திருக்கும். மாமி சிறிதும் அசிங்கப்படாமல் அந்தத் துணிகளை சோப் போட்டு தோய்த்து உலர்த்தித் தருவார்.

ஒரு தாய் மட்டுமே செய்யக்கூடிய அருவருப்பான வேலையை மாமி செய்யும்போது எனக்கே என்னவோ போல் இருக்கும். இன்றும் நான் அதை நினைக்கும்போது கண்கள் ஈரமாகிறது.

என்னையும் குழந்தையையும் குளிப்பாட்டி, எனக்கு வேளாவேளைக்கு பத்தியம் போட்டு (தட்டைக் கூட அலம்ப விடமாட்டார்)என்னுடன் ஒருமாதம்  இருந்து விட்டு திரும்ப செல்வார்.

அதன்பிறகு எனக்கு மூன்று குழந்தைகளுக்கும் மாமிதான் பிரசவத்தின்போது உதவிக்கு வந்திருந்ததோடு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதும் என்னைக் கண்போல் பார்த்துக் கொண்ட அவரது அன்புக்கு என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது.

எங்கள் வீட்டுக் கல்யாணங்
கள், பூணல் போன்ற விசேஷங்களுக்கு மாமிதான் முதலில் வருவார். அத்தனை வேலைகளும் இழுத்துப் போட்டு செய்துவிட்டு எங்களைப் பிரிய மனமின்றி கண்கலங்கியபடி திரும்பிச் செல்வார். இன்று அவர் இல்லாவிட்டாலும் என் பிரசவ நேரங்களை நினைக்கும்போது மாமியின் நினைவுதான் வரும்.

'பிரசவ அறையில் உடனிருந்து உதவியர்களுக்கு ஒரு சின்ன நன்றி சொல்லலாமே' என்ற வரிகளைத் தந்து இதுவரை நான் யோசிக்காத ஒரு தலைப்பில் சற்று தாமதமாக என்னை எழுத வைத்த மாம்ஸ்பிரஸ்ஸோவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏

புகைப்படத்தில்..என் திருமணத்தில் என்  அம்மாவும் , என்னைப் பெறாத அம்மாவும்🙏

கருத்துகள்