கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.
#வண்ணங்களே எண்ணங்களாய்..
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..
"வனிதா! சாயந்திரம் ஐந்து மணிக்குள் வந்துடும்மா! மறந்துடாதே!"
"ப்ச்! மறுபடியும் பெண் பார்க்கும் படலமா? இந்த ஜன்மத்தில் கல்யாணம் நடக்கப் போறதில்ல. நீ வீணா ஸொஜ்ஜி, பஜ்ஜின்னு வேஸ்ட் பண்ற! இந்தக் காலப் பையன்களெல்லாம் பொண்ணு லைலா மாதிரி இருக்காளா, ஐஸ்வர்யா மாதிரி இருக்காளான்னு தேடறாங்க. என்னைப் போய் எவனம்மா கல்யாணம் செய்துப்பான்!"
வனிதா கையில் ஒட்டுவது போல் நல்ல கருப்பு. சப்பையான மூக்கு. அகல நெற்றி. அழகு குறைவு.
அவளுக்கு அடுத்து பிறந்த சுனிதாவும், கடைக்குட்டி ஸவிதாவும் நல்ல சிவப்பு. ஒரு முறை இவள் இருப்பதை அறியாமலே இவளை கருப்பி என்று பேசியதை கேட்டிக்கிறாள். எங்கு சென்றாலும் அவர்கள் இருவரும் செல்வார்களேயன்றி வனிதாவைக் கூப்பிட மாட்டார்கள்.
சிறு வயதிலேயே வீட்டிலும், பள்ளியிலும் ஒதுக்கப்பட்ட வனிதா படிப்பில் முழுக்கவனமும் செலுத்தி முதல் மாணவியாகத் தேறினாள். பி.காம் இறுதியாண்டு படிக்கும்போது வங்கித் தேர்வு எழுதினாள். இண்டர்வியூவில் அவள் படிப்பிற்கே முதலிடம் கிடைத்தது. வங்கியில் சேர்ந்தாள்.
வங்கியில் அருணாவைத் தவிர யாரும் அவளிடம் பேசிப் பழக மாட்டார்கள். வனிதாவின் புத்திசாலித்தனம், தன் குறையைப் பற்றி நினைக்காமல் சிரிக்க சிரிக்கப் பேசும் குணம், எல்லோருக்கும் உதவும் பண்பு இவற்றைக் கண்டு அருணா பலமுறை வியந்திருக்கிறாள்.
அலுவலகத்தில் சிலர் வனிதாவைப் புகழ்ந்து பேசி காரியம் சாதித்துக் கொண்டபின், பின்னால் அவளைக் கேலி பேசுவதைக் கண்டு அருணா ஆத்திரப்படுவாள். அருணா பேசியதைக் கேட்டுச் சிரிப்பாள் வனிதா.
"பிறந்தது முதலே இது மாதிரி விமர்சனங்களைக் கேட்டு வளர்ந்தவள்தானே நான்? அவர்களுக்கு என்னைப் பற்றிப் பேசுவதில் சந்தோஷம் கிடைகிறதென்றால் அதைத் தடுக்க நான் யார்? அப்புறம் அருணா, இன்னிக்கு நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். வழக்கம் போல், பெண் பார்க்கும் விழா!"
"வாழ்த்துக்கள் வனி!"
"உனக்கு நாளைக்கு ட்ரீட் நிச்சயம் உண்டு, எதற்குத் தெரியுமா? பெண் பார்ப்பதில் நாளைக்கு 'வெள்ளி விழா!' வரப்போகும் பையன் நம்பர் இருபத்தைந்து!"
அருணாவிற்கு கண்ணில் நீர் தளும்பியது. 'கடவுளே, இந்த இடம் வனிதாவுக்கு முடிய அருள் புரியேன்!'
பஸ் பிடித்து வீடு சென்ற வனிதாவின் மூக்கை சொஜ்ஜி, பஜ்ஜி வாசனை துளைத்தது.
பாவம் அம்மா! அலுக்காமல் செய்கிறாள்!'
முகத்தை அலம்பி இளம் பச்சை நிற பட்டுப் புடவை, அதற்கேற்ற ரவிக்கை அணிந்து, லைட்டான மேக்கப்புடன் வனிதா ரெடியாகவும் பையன் வீட்டார் வரவும் சரியாக இருந்தது.
அவன் உயரமாக, சிவப்பாக, கம்பீரமாக இருந்தான். அவ நம்பிக்கையுடன் ஹாலுக்குச் சென்றாள். அப்பா அறிமுகப் படுத்தினார். "நமஸ்காரம் பண்ணும்மா!" என்றார்.
"நோ நோ! எதற்கு அந்த ஃபார்மாலிட்டியெல்லாம்? நீங்களும் உட்காருங்க!"
பையன் சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்த்த வனிதா, எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். சம்பிரதாய பேச்சுக்கள், டிபன், காபி முடிந்து அவர்கள் கிளம்பினார்கள். போய் போன் செய்வதாகச் சொன்னார்கள்.
வழியனுப்பிவிட்டு வந்த அம்மா கவலைப் பட்டாள். "கடவுளே! நல்ல பதிலா சொல்லணுமே!"
"ஆமா! ரதியாட்டம் பெத்து வச்சிருக்கே... அவங்க சொல்லப் போற பதில் தெரிஞ்சதுதானே?"
தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி அவர் பேசியது அவளுக்கு வெறுப்பைத் தந்தது.
சாப்பிடக்கூட தோன்றாமல் படுத்து விட்டாள் வனிதா. இந்த நாடகம் போதுமென்று மறு நாள் கண்டிப்பாக சொல்லிவிட தீர்மானித்தாள்.
காலையில் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க, தொலை பேசி ஒலித்தது. மூர்த்தி எடுத்தார். போனை வைத்தவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
"பார்வதி! பையனுக்கு வனிதாவை ரொம்பப் பிடிச்சிருக்காம். பையனின் மாமாதான் பேசினார்."
வனிதாவிற்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. 'ஜிவ்'வென்று வானத்தில் பறப்பது போலிருந்தது.
"அவ்வளவு அழகான பையனா தன்னை...?"
பையன் வேலை செய்யும் கம்பெனியின் பெயரைக் கேட்டுக் கொண்ட வனிதா, ஆபிஸூக்குக் கிளம்பினாள். அருணாவிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் மகிழ்ச்சியில் குதித்து விட்டாள்.
வனிதா தன் இடத்துக்குச் சென்றாள். சதீஷின் அலுவலகத்துக்குப் போன் செய்தாள்.
"நான் தான் வனிதா பேசறேன். ஈவினிங் கொஞ்சம் வர முடியுமா?"
இருவரும் ஹோட்டலின் தனியறைக்குச் சென்றனர்.
"என்னங்க? என்னை வரச் சொல்லிட்டு எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? என்ன விஷயம்? எதுவானாலும் ஓபனா கேளுங்க!"
"உண்மையாகச் சொல்லுங்கள்! இவ்வளவு பர்சனாலிட்டியாக இருக்கும் நீங்கள், அழகான பெண்களை விட்டு..."
"மனப் பூர்வமாகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டேன். அழகு, பர்ஸனாலிட்டியெல்லாம் வெளியில் தேவையில்லை. இதை நான் கண்ணால் பார்த்து அனுபவித்தவன்..."
சர்வர் ஆர்டர் கேட்டு வர, ஸ்வீட்டும், காஃபியும் ஆர்டர் செய்தான்.
"எங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. எனக்கு எட்டு வயதிருக்கும்போது ஒரு தீ விபத்தில் முகம் முழுக்க நெருப்பு பட்டு வெந்து விட்டது. உடம்பும் கருமையாகி விட்டது. ஏகப்பட்ட ட்ரீட்மெண்ட் கொடுத்தும் அம்மாவின் பழைய முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அதன் பிறகு நான் அம்மாவின் முகத்தைப் பார்த்துப் பேசியதேயில்லை..."
நினைவுகளில் மூழ்கி மீண்டும் தொடர்ந்தான்.
"அம்மா அழகாக இருந்தபோது ஆசையாக இருந்த அப்பா, அந்த விபத்துக்குப் பின் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பைக் கொட்டினார்."
"பாவம் அம்மா, அந்த வருத்தத்திலேயே சீக்கிரம் போய்விட்டாள். அம்மா என்னிடம் 'முதலில் அழகாயிருந்து இப்ப அழகு போனதால்தானே எனக்கு இந்தக் கஷ்டம்? வெளி அழகில் என்ன இருக்கு? நல்ல மனம், குணம் இவை தாண்டா ஒரு பெண்ணுக்கு முக்கியம். உன் அப்பா இப்படி மாறுவார்னு நான் நினைக்கவேயில்லை சதீஷ்' என்று அழுவாள். அப்பவே முடிவு எடுத்தேன். அழகான, சிவப்பான பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதில்லை
யென்று. அம்மா போன ஒண்ணரை வருஷத்தில் அப்பாவும் மாரடைப்பு வந்து போய்விட்டார். இப்ப புரிகிறதா?"
நிம்மதியும், சந்தோஷமும் மனதை நிறைக்க, வனிதாவின் முகம் களை கட்டியது.
பைக்கில் ஏறியவள் தயக்கமின்றி அவனை ஒட்டி அமர்ந்து அழகான உலகத்துக்குப் பயணமானாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக