காரடை


காரடைநோன்பு ஒவ்வொரு வருடமும் மாசியும்,பங்குனியும் கூடும் நாளில் வரும்.இது கணவனின் நலன் வேண்டி அவரது நீண்ட ஆயுளுக்காக ஸ்ரீகாமாக்ஷி தேவியை வேண்டி மனைவியர் செய்யும் நோன்பு. திருமணமாகாத பெண்களும்,
குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். விரதம் இருக்க வேண்டிய தேவையில்லை.

'மாசிக் கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதனால் இதை பங்குனியில் செய்வதை விட மாசி மாதம் இருக்கும்போதே செய்ய வேண்டும்.

சாவித்திரி தன கணவன்
சத்யவானின் உயிரை
யமனிடமிருந்து மீட்க வேண்டி,காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இந்த நோன்பு செய்ததாக ஐதீகம்.

நோன்பு செய்யும் நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, கிழக்கு பார்த்து சிறு கோலம் போட்டு,
வீட்டிலுள்ள பெண்களின் எண்ணிக்கைப்படி சிறு வாழைஇலை போட்டுவெற்றிலை,பாக்கு,வாழைப்பழம், வெல்ல அடை,உப்பு அடை, வெண்ணை இவற்றுடன் கழுத்தில் கட்டிக் கொள்ளும் மெல்லிய மஞ்சள் கயிறும் சுவாமி முன் வைத்து நிவேதனம் செய்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு சுவாமிக்கும், கணவருக்கும் நமஸ்காரம் செய்தபின்பு காரடையை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

நோன்பு செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

'உருகாத  வெண்ணையும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன்
ஒருநாளும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்.'

சமஸ்கிருத மந்திரம்..
மந்திரம் தோரம் கிருஷ்ணாமி சுபகே !
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து:ஆயுஷ்ய ஸித்யர்த்தம் !
ஸூப்ரீதா பவ ஸர்வதா !

இதற்கு நிவேதனமாக வெல்ல, உப்பு காரடைகளைச் செய்வது வழக்கம். அதற்கான செய்முறைக் குறிப்பு..

தேவை
அரிசிமாவு-- 2 கப் (கொழுக்கட்டை மாவு தயாராகக் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொள்ளலாம்.)
வீட்டில் தயாரிக்கும் முறை...
21/2  கப்  பச்சை  அரிசியை  நன்கு   களைந்து  1/2  மணி  ஊற  வைத்து, வடிகட்டி  மிக்ஸியில்  மாவாக அரைக்கவும்.  அதை  வெறும்  வாணலியில் லேஸாக  சிவக்க  (கோலம் போட  வரும்  பதம்)  வறுக்கவும்.

தேவை
காராமணி-- 1/2 கப் (இரண்டுக்குமாக)
தேங்காய் -- 1
(ஒரு  மூடியை  வெல்ல  அடைக்காக  நறுக்கிக்  கொள்ளவும்.  அடுத்த  மூடியை  துருவிக்  கொள்ளவும்.)

செய்முறை
வெல்லஅடை
அரிசி மாவு--1 கப்
வெல்லம்-- 11/2  கப்
ஏலப்பொடி-- 1/2 தேக்கரண்டி
தண்ணீர்-- 2 கப்

காராமணியை  சற்று  சூடு  வர  வறுத்து,  15  நிமிடம்  நீரில்  ஊற  வைக்கவும்.  குக்கரில்  4  சத்தம்  விட்டு  வேக  விடவும்.

தண்ணீரைக்  கொதிக்க வைத்து  அதில்  வெல்லம்  போட்டுக்  கரைய  விடவும். வடிகட்டவும். கொதித்ததும்  அதில்  வறுத்த  மாவு,  நறுக்கிய  தேங்காய்த்துண்டுகள்,  வெந்த  காராமணியில்  பாதி,  ஏலப்பொடி,  4  டீஸ்பூன்  நெய்  சேர்த்து  மொத்தையாகக்  கிளறவும்.

இறக்கி  ஆறியதும்,  ஒரு  பெரிய  எலுமிச்சை  அளவு  உருட்டி  வடை  மாதிரி  செய்து  தட்டி,  நடுவில்  துளை செய்யவும்.

உப்பு  அடை
வாணலியில்  4,5 ஸ்பூன்  தேங்காய்  எண்ணை,  2  ஸ்பூன்  நெய்  சேர்த்து  அதில்  சிறிது  பெருங்காயம்,  கடுகு,  2மிளகாய் வற்றல், 2பச்சைமிளகாய்,கறிவேப்பிலை  தாளித்து  11/2  கப்  தண்ணீர்  விடவும்.  அதில்  1 கப் வறுத்த  மாவு, துருவிய  தேங்காய்,  வெந்த  காராமணி,  உப்பு  சேர்த்து  கெட்டியாகக்  கிளறி  வெல்ல  அடை  போலத்   தட்டி இட்லித் தட்டில் வைத்து அல்லது ஒற்றைத் தட்டிலோ வைக்கவும்.

குக்கரில் வைத்து 4 சத்தம் வரும்வரை வேகவிடவும்.
வெண்ணையுடன்  நோன்பு  செய்யவும்.

இவ்வருடம் காரடை நோன்பு இன்று மாலை 4 மணி முதல் 4 1/2
மணிக்குள் செய்ய வேண்டும்.

நோன்பு செய்யும்  மங்கையருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)