உங்க ஊர் ஸ்பெஷல்

எங்கள் கருத்து..உங்கள் எழுத்து..

அசோகா ஹல்வா


ஹல்வா ஒரு ருசியான நாவூற வைக்கும் இனிப்பு. சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என எண்ண வைக்கும் அற்புத சுவை கொண்ட இனிப்பு!

தஞ்சை மாவட்டத்தின் ஸ்பெஷல் அசோகா ஹல்வா! இது தஞ்சையிலுள்ள திருவையாறில் செய்யப்படும் பிரபலமான இனிப்பு. இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தெரியுமா? அதுவும் ஒரு  ஒரு ருசியான கதை.

ஹல்வா என்றாலே கோதுமையில் செய்வது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அசோகா ஹல்வா பயத்தம் பருப்பில் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப் போரின் சமயம் நம் நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் சுவையான ஹல்வா செய்ய முடியவில்லை.

ஆனால் மக்களுக்கோ ஹல்வா மோகம் குறையவில்லை! ஹல்வாவை எப்படியாவது செய்து ருசிக்க வேண்டும் என்ற ஆவலில் ராமு ஐயர் என்பவர் கோதுமைக்கு பதிலாக பயத்தம் பருப்பை சேர்த்து அல்வா செய்தார்.

அதன் ருசியில் மயங்கிய மக்கள் அதற்கு பெரும் ஆதரவு தர ஹல்வா வியாபாரம்  தொடங்கப்பட்டு அமோகமாக விற்பனை ஆயிற்று. திருநெல்வேலியின் இருட்டுக்கடை ஹல்வா போல் திருவையாறு ஆண்டவர் கடை ஹல்வா மிக பிரசித்தம்!
அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான  இனிப்பாகப் புகழ் பெற்ற வரலாறு இது! அதன் செய்முறை எழுதியுள்ளேன்.

தேவை
பயத்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
நெய் - 2 கப்
பால்  - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -15
திராட்சை  -  10
சீவிய பாதாம்  - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ  - சில இதழ்கள்.
கேசரி பவுடர் - 4 சிட்டிகை

செய்முறை
பயத்தம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் ஒரு கப் தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து  நன்கு குழைய வேக வைக்கவும்.

இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை வறுத்து எடுக்கவும்.அதில் மேலும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து  சுடவைத்து,கோதுமை மாவை பொரித்தாற்போல்  வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஒரு வாணலியில் வெந்த பயத்தம்பருப்பு போட்டு கரண்டியால் நன்கு மைய மசிக்கவும். பருப்பு அரை வேக்காட்டில் இருக்கக் கூடாது. அதனுடன் பொரித்த கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டும் சேர்ந்து கொண்டு கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும்.கேசை சிறிதாக்கி கை விடாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டும் சமயம் சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்க்கவும்.

கரண்டியில்  ஒட்டாமல் நெய் பிரிந்து நன்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.அதிகமாகக் கிளறினால் மிக கெட்டியாகி விடும். தளதள வென்று இருக்கும்போதே இறக்கவும்.

விருப்பப் பட்டால் திராட்சை, பாதாம் துண்டுகள் நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான திருவையாறு ஒரிஜினல் அசோகா ஹல்வா வாயில் போட்டால் கரையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)