உங்கள் சிந்தனை உங்கள் எழுத்து

 




மகத்தான ஒரு உறவு!

அன்புள்ள மாமா...

உறவுகளில் யாரை ரொம்பப் பிடிக்கும் என்றால் யோசிக்காமல் மாமா என்போம். அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். 

பள்ளிகளில் விடுமுறை 

விட்டால் உடன் கிளம்புவது மாமா வீட்டுக்குதான்! 


தன் சகோதரி குழந்தைகளுக்கு 

அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன்தான். இன்றும் மாமா வருகிறார் 

என்றால் குழந்தைகளின் சந்தோஷம் சொல்லிமாளாது!


தம் சகோதரிகள் குழந்தைகளின் ஒவ்வொரு நிகழ்விலும், சித்தப்பா பெரியப்பாக்களை விட மாமாவின் பங்கு முக்யமானது.


காது குத்துவதிலிருந்து, 

திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் அனைத்திலும் 

மாமாவுக்கே முதல் மரியாதை.


இப்பொழுது ஒரு குழந்தை போதும் என்று நினைப்பவர்களுக்கு சகோதரபாசம் பற்றி தெரியாத

தோடு, இந்த மாமா சித்தி பெரிமா உறவெல்லாம் தெரியவே வழியில்லாதது துரதிர்ஷ்டமே.


எல்லா விஷயங்களுக்கும் பாதுகாப்பாக "பேக்அப்" (Backup) வைத்துக்கொள்ளும்  மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாமா அத்தை போன்ற ஒரு பாசமான backup இல்லாத பாதுகாப்பற்ற நிலையை  தம் குழந்தைளுக்கு உருவாக்குகிறார்களோஎனத் 

தோன்றுகிறது.


எனக்கு மூன்று மாமாக்கள். நாங்கள் 13 மருமக்கள்! எங்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி பாசத்தையே காட்டுவார்கள் என் மாமாக்கள்.பெரிய மாமாக்களிடம் மரியாதை அதிகம்.


கடைசி மாமாவிடம் எங்களுக்கு அதிகமான அன்பு உண்டு. எங்கள் வயதுக்கிணையாக எல்லாம் பேசுவார்! விளையாடுவது, கிண்டலடிப்பது, வெளியில் அழைத்துப் போவது எல்லாவற்றிலுமே அவரிடம் எங்களுக்கு உரிமை அதிகம். கல்யாணத்தில் எங்கள் எல்லோர் நலங்கின் போதும்

 ..நேற்றுவரை நீ யாரோ..

பாட்டைப் பாடி கலாட்டா செய்து சுவாரசியமாக்கி விடுவார்!


என் தாத்தா வீட்டில் பிறந்த முதல் குழந்தை நான் என்பதால், எனக்கு தனக்கு பிடித்த பெயரை வைக்க எல்லாரும் ஆசைப் பட்டார்களாம்! என் அப்பா எல்லாரையும் அவரவருக்கு பிடித்த பெயரை ஒரு பேப்பரில் எழுதி மடித்து என் சின்ன

மாமாவை எடுக்கச் சொல்ல,அவர் எடுத்தது அவர் எழுதிய சீட்டை! எப்படி?


தான் எழுதிய பெயர் வர வேண்டும் என்பதற்காக அவர் மடித்த பேப்பர் மேல் ஒரு ஸ்டார் போட்டு வைத்து, அதையே எடுத்தாராம். அவருக்கு பிடித்த பெயரே என் பெயராயிற்று! யாருக்கும் அது பற்றி சந்தேகம் வரவில்லை. எனக்கு பெயர் வைத்த பிறகு அதை சொன்னாராம்!


என்னைப் பெண்பார்க்கும்

போது என் மாமாவும் இருந்தார். பக்கத்து அறையின் சன்னலை சிறிதாகத் திறந்து வைத்து...பையனை நன்னா பார்த்துக்கோ...என்றார்! என் கணவரிடம்..என் மருமாளோடு பேசுகிறீர்களா?..என்றபோது என் மாமியார் வேண்டா

மென்றதால் பேசவில்லை!


என் கணவரை வழியனுப்பச் சென்றபோது...என் மருமாளை பிடிச்சிருக்கா. ரொம்ப நன்னா உங்களை பார்த்துப்பா..என்று சொல்லி அவரிடம் ok வாங்கி விட்டேன்..என்று சொல்லி சிரித்தார்! 


எனக்கு..இப்போ கல்யாணம்

வேண்டாம்.. என்றபோது, 

..சினிமா ஹீரோ மாதிரி

யெல்லாம் ஆத்துக்காரர் இருக்கணும்னு 

நினைக்காத. நல்ல பையன். நல்ல வேலை. உன்கிட்ட ஆசையா இருப்பார்..

என்றெல்லாம் சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தார்!


மாமா தஞ்சைவாசி. அவருக்கு ஐயப்ப பக்தி அதிகம்.நாற்பது வருடங்களுக்கு மேலாக  தவறாமல் சபரிமலை சென்றுள்ளார். ஐயப்ப கீதங்களை அருமையாகப் பாடுவார். 


நான்கு ஆண்டு

களுக்குமுன் தம் உறவினர் மற்றும் நண்பர்களுடன்  சபரிமலை சென்றவர் படிகளில் ஏறிச் செல்லும்போது திடீரென மயங்கி படியில் அமர்ந்தவர் அப்படியே ஐயப்பன் சரணத்தில் இணைந்து விட்டார். என்ன தவம் செய்தாரோ இந்தப் பேறு பெற?


இந்த சம்பவம் எங்களுக்கு பெரிய அதிர்ச்சி ஆகிவிட்டது.அதிலிருந்து வெளிவர கொஞ்ச நாளாயிற்று. நான் எழுதும் கட்டுரைகளை புத்தகங்களில் படித்து உடனே ஃபோன் செய்து பாராட்டுவார்.மாமா சபரிமலை செல்லுமுன் அதுபோல் பாராட்டியபோது

 ..நாங்கள் அடுத்த வாரம் வருகிறோம்..

என்றேன். 


தான் சபரிமலை போவது பற்றிச் சொன்னவர் கண்டிப்பாக வந்து பிரசாதம் வாங்கிக்கொள் என்றார். அவரை இப்படிப் பார்ப்பேன் என்று அன்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. 


இன்று நினைத்தாலும் அவரின் பாசம் கண்களில் நீரை வரவழைக்கிறது. அவர் பேச்சுகளையும், நினைவுகளையும் மறக்க முடியவில்லை.அவரது திடீர் மறைவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சி. அவருக்கு என் அஞ்சலி🙏


அன்புள்ள மாமாவுக்கு 🙏

'தாய்' மாமன் என்றும், 

'அம்மா'ன் என்றும் 

என்னை ஈன்ற என்

அன்னையை நினைவூட்டும் 

அன்பு மாமா நீவிர்  வாழ்க!


அன்புக்கு மறுபெயர் நீங்கள்!

ஆதரவு தந்து அணைக்கும் 

உங்கள் அன்புக்கு 

அணையும், இணையும் ஏது!


இளகிய இதயம் கொண்ட தாங்கள்

ஈசன் வசம் பாசம் கொண்டீரோ?


உயிரான துணைவியை உத்தமமான பிள்ளைகளை

உடன் பிறந்தோரை

உற்றாரை நட்பை

ஊதித் தள்ளிவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? 

என்று உங்களைக் காண்போமென்று

ஏக்கத்துடன் நாங்கள்

ஏங்கி அழுவது உங்களுக்கு தெரியவில்லையா?


ஐயப்பன் உங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு

ஒவ்வொரு நாளும் உங்களின்

ஓங்கி எழும் சரணம் பாடிக் கேட்க ஆசை கொண்டாரோ?


காற்றில் கலந்தீரோ?

விண்ணில் மறைந்தீரோ?

இனி உங்களைக் 

காண்பதெப்போது?


தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை என்றும்

வேண்டி நிற்கும் இந்த சின்னவளின் சிரம் 

தாழ்ந்த நமஸ்காரங்கள்🙏


எம் மனங்களில் 

என்றும் விண் மீனாய்

விலகாத அன்பு மாமனாய்

எப்போதும் வாழ்வீர்.

வாழ்க நீ அம்மான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)