அனுபவம்
என் சிந்தனை..என் எழுத்து..
டைகர்டெம்பிள்...பாங்காக்
பயணங்கள் நமக்கு மன உற்சாகத்தை அளிக்கிறது. நம் பொது அறிவை விரிவடையச் செய்கிறது. பல ஊர்கள், பல நாடுகள், அந்நாட்டு மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களையும் நாம் அறிய முடிகிறது.
நான் எப்பொழுதும் எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்நாட்டின் வித்யாசமான சுற்றுலா இடங்களை சென்று பார்த்து வருவேன். அது போன்று சிங்கப்பூரிலுள்ள என் மகன் வீட்டிற்குச் சென்றபோது பாங்காக் சென்றிருந்தோம்.
அப்போது அருகிலுள்ள காஞ்சனபுரியில் உள்ள 'டைகர் டெம்பிள்' என்ற இடத்திற்கு சென்று வந்தோம்.
அது ஒரு புலிகளின் சரணாலயம் எனலாம். ஆனால் அங்குள்ள புலிகள் கொடூரமில்லாத, மென்மையான குணமுள்ளவை. எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் அந்த இடத்தின் சிறப்பு. அதனால்தான் அவ்விடம் ஆலயம் எனப்படுகிறது.
பழமையும், புதுமையும் இணைந்த தாய்லாந்தின் தலைநகரமான மன்னராட்சி நடைபெறும் பாங்காக் ஒரு அழகான நகரம். மன்னரின் அலங்கார மாளிகை, புத்த மடாலயங்கள், தாய்லாந்தின் சிறப்பான ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்கள், இவற்றோடு நம் மாரியம்மன் கோவில், பிரம்மா, கணபதி ஆலயங்கள், மிதக்கும் சந்தைகள், வானளாவிய மால்கள் என்று நம்மை கவர்ந்து இழுக்கின்றன.
பாங்காக்கிலிருந்து சுமார் 150 கிலோமீட்டரில் அமைந்துள்ள காஞ்சனபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது டைகர் டெம்பிள் . இங்குள்ள புலிகளை நாம் தொடலாம்: அணைத்துக் கொள்ளலாம்; அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்; அவற்றிற்கு பாலூட்டலாம்; அவற்றுடன் விளையாடலாம்!
இந்த டைகர் டெம்பிள் 1994ம் ஆண்டு உருவாயிற்று.வாட் பா யன்னசம்பன்னோ என்ற புத்த மடாலயம் அப்பாட் ப்ரா (Abbot Phra) என்ற பிட்சுவால்
ஆரம்பிக்கப்பட்டது. மடாலயம் ஒரு வனவிலங்குகள் சரணால
யமாகவும் மாறியது எப்படி?
ஒருநாள் ஒரு சிறிய காட்டுக் கோழி அடிபட்டு மடாலயத்துக்கு வர அங்கிருந்த பிட்சுக்களால் பராமரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மயில்கள், காட்டுப் பன்றிகள் என்று பல மிருகங்கள் ஒவ்வொன்றாய் வர மடாதிபதிகளும் அவற்றை அன்பாய்ப் பராமரித்தனர். ஆதரவு காட்டி உணவளித்தனர்.
1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம், வேட்டைக்காரர்களால் ஒரு தாய்ப்புலி இறந்துவிட்டது. காயமடைந்த அதன் குட்டியை பக்கத்து கிராம மக்களிடம் கொடுத்து அதன் தோலை உரித்து வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பணம் கொடுப்பார்களாம் அந்த விலங்கு வேட்டைக்காரர்கள். அதனைக் கொல்ல மனமில்லாத இரக்கமுள்ள கிராமத்தார் அதனைக் கொண்டு வந்து மடாலயத்தில் விட்டனர். பிட்சுக்கள் எத்தனையோ அன்பாகப் பராமரித்தும் அந்த புலிக்குட்டி ஜூலை மாதம் இறந்து விட்டது.
அதன் பின் கிராம மக்கள் தாய்ப்புலி கொல்லப்பட்டு ஆதரவில்லாமல் இருந்த பல புலிக் குட்டிகளை மடாலயத்தில் ஒப்படைக்க, அவை பெரிதாகி குட்டிகளைப் போட்டு இனப்பெருக்கமும் செய்தன. அன்பான புத்த பிட்சுக்களிடம் வளர்ந்த புலிகளும் பூனைகளைப்
போல் மிகச் சாதுவாக விளங்கின. முதலில் அவற்றிடம் பயந்த மடத்தினர் பின் சகஜமாகப் பழக ஆரம்பிக்க, இதனைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட மக்கள் இந்த அதிசயத்தைக் காண வர ஆரம்பித்தனர். இப்படி உருவானதுதான் டைகர் டெம்பிள். அன்பில் வயப்படாத விலங்கு உண்டா? அங்கு வந்த புலிகளும் அன்பான பிட்சுக்களிடம் வளர்ந்ததால் மூர்க்க குணம் இன்றி வளைய வருகின்றன.
ஒவ்வொரு புலிக்கும் ஒரு வாலண்டியர் உண்டு. கழுத்தில் சங்கிலி போடப்பட்ட புலிகளை அவர்களே அழைத்து வருவர். கிட்டத்தட்ட 20 புலிகளை ஒரே நேரம் காணும்போது மனம் சற்று பதறுகிறது. அவை புத்த பிட்சுக்களுடன் சாதுவாக நடை போடுகின்றன; அவர் சொல்வதைக் கேட்டு நடக்கின்றன. அவற்றின் உருவத்தைக் காணும்போது நம் மீது பாய்ந்து விடுமோ என அச்சம் ஏற்படுகிறது.
அவை யாரையும் எதுவும் செய்யாது என்று அவர்கள் உறுதி செய்து நம்மை அவற்றைத் தொட்டுக்
கொண்டு, அவற்றின் மீது சாய்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு என்று பல போஸ்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். நாம் அவற்றின் அருகில் சென்றாலும், தொட்டாலும் அவை எதுவும் செய்யாததுடன் நமக்கும் பயம் தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.
நாங்களும் அவற்றுடன் பல புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். என்னதான் வாலண்டியர்கள் அருகில் இருந்தாலும், அவை வாலை வீசும்போதும், முகத்தை சட்டென்று திருப்பும்போதும் நடுங்கி விட்டேன். ஆனாலும் புலியின் வாலைப் பிடித்தது ஒரு வித்யாசமான அனுபவம்தான்!
இவை தவிர குட்டிப் புலிகளுக்கு நாமே ஃ பீடிங் பாட்டிலில் பால் கொடுக்கலாம்: அவற்றுடன் நீரில் குளிக்கலாம்: விளையாடலாம்! பூனைக் குட்டிகளைப் போல அவை அழகாக விளையாடுகின்றன. ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட பணம் செலுத்த வேண்டும்.
புலிகளைத்தவிர பல மிருகங்களுக்கும் அங்கு உணவு அளிக்கப்படுகிறது. எல்லா புலிகளுக்கும் தனித்தனி குகைகள் உண்டு.
புலிகளுக்கு போதை மருந்து கொடுக்கப்படுவதாலேயே அவை சாதுவாக இருப்பதாக சில அமைப்புகள் புகார் செய்ய, 2008ம் ஆண்டு ABC சேனலின் செய்திப் பிரிவினர் அங்கு சென்று மூன்று நாட்கள் கண்காணித்து அப்படி எதுவும் இல்லை என உறுதியாக்கினர். கொடூரத் தன்மையில்லாத சாதுவான புலிகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என்கின்றார் மடாதிபதி அப்பாட் !
இங்கு அமைந்துள்ள புத்த ஆலயத்தில் 80 கிலோ எடையுள்ள தங்கத்தாலான புத்த விக்கிரகம் காட்சி அளிக்கின்றது. புனிதமான போதிமரம் புத்த பெருமானுக்கு ஞானம் கிடைத்ததன் அடையாளமாகஇங்கு நடப்பட்டுள்ளது. புலிகள் இயற்கையாக வாழ இங்கு குளங்களும், அருவிகளும்,தீவுகளும் அமைக்கப் பட்டுள்ளன.
இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சில நிபந்தனைகளும் உண்டு. சிகப்பு மற்றும் ஆரஞ்சு கலர் ஆடைகளோ, கால்கள் தெரியும் குட்டைப் பாவாடைகள், கையில்லாத உடைகள், சலசலவென சப்தம் போடும் உடைகள், வாசனை திரவியங்கள் இவை அணிந்து வரக் கூடாது. குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. நேரம் காலை 12 மணி முதல் 3.45 வரை. நுழைவுக் கட்டணம் கிட்டத்தட்ட 1000 ரூபாய்கள். புலிகளின் பராமரிப்புக்கென அங்குள்ள கடைகளில், டீஷர்ட்கள் , கீ செயின் என்று பல பொருட்கள் விற்கப்படுகின்றன. நன்கொடை
களும் பெறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த
டைகர் டெம்பிள் மூடப்பட்டு விட்டதாக செய்தி வந்தது.
நான் பல நாடுகளுக்கு சென்று பல இடங்களைப் பார்த்திருந்தாலும் இந்த அனுபவம் வித்யாசமானது!
கருத்துகள்
கருத்துரையிடுக