உங்கள் சிந்தனை உங்கள் எழுத்து..
குழந்தை வளர்ப்பு..
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.
இதிலிருந்து அன்னைதான் குழந்தைகளை சரியாக வளர்ப்பவள் என்பதை சொல்லியிருக்கிறார் கவிஞர்! குழந்தைகள் பெரும்பாலான நேரம் அன்னையருடன் இருப்பதால் அவ்விதம் சொல்லியிருப்பார் போலும்! ஒரு பெண்ணுக்குத்தான் பொறுமை, அன்பு, தவறுகள் செய்யக் கூடாது என்று சொல்லி திருத்தும் திறன்கள் அதிகம் என்பது தெரிகிறது.
அந்த நாளில் என் பெற்றோர் எங்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள்.12 வயது ஆகிவிட்டால் எந்தப் பையனிடமும் பேசக் கூடாது, பழகக் கூடாது என்பது அந்நாளைய கட்டுப்பாடு. காதல் வந்துவிடும், மனம் கெட்டுப் போய்விடும் என்ற பயத்தில் காலேஜுக்கு கூட பெண்களை அனுப்பாத காலம் அது! குமுதம் விகடன் போன்ற புத்தகங்களைக் கூட என் அம்மா படித்துவிட்டு ஒளித்து வைத்து விடுவார்! MGR படங்களுக்கு தடா! குடும்பப் படங்களுக்கு மட்டுமே அழைத்து செல்வார்கள்.
இக்காலத்திலோ எதிலும் ஒளிவு மறைவு இல்லை. உள்ளங்கையில் சகலமும் தெரிந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் செய்தால் என்ன தவறு என்ற எண்ணம் மனதில் தோன்ற, அதுவே அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு தடை ஆகிறது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போவதால் அந்நாளை போன்ற கவனிப்பு இன்று குழந்தைகள் மேல் இல்லையோ என்பது என் எண்ணம்.
வீட்டில் நல்லது கெட்டது சொல்லித்தர பெரியவர்களும் இல்லை..இருப்பவர்களும் அபத்த T V சீரியல்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருக்கும் நேரமும் பலருக்கு குழந்தைகளை விட முகநூலும், வாட்ஸப்பும் முக்கியமாகி விடுகிறது. குழந்தைகள் எதிரில் தங்களுக்குள் வாக்குவாதம், பெரியவர்களை பற்றி தவறாகப் பேசுவது, நீ உயர்வா நான் உயர்வா என்ற ஈகோ, மனத்தைக் கோணலாக்கும் சீரியல்கள்... இவை குழந்தைகளை மனம் மாறி, வழி மாறி செல்லத் தூண்டுகின்றன.
என் பெற்றோர் எங்களை கண்டிப்புடன் வளர்த்தது போல் நாங்கள் எங்கள் குழந்தைகளை வளர்க்கவில்லை. அவர்களை தட்டிக் கொடுத்து, விட்டுப் பிடித்து வளர்த்தோம். அவர்கள் படித்தது ஆரம்பத்திலிருந்தே co-education பள்ளிகள். எனவே வித்யாசம் இல்லாமல் இருபாலாரும் இணைந்து பழகியதால் தவறான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டதில்லை. சிறு வயதில் படிக்கவும், எழுதவும் அவர்களும் அடம் செய்ததுண்டு. ‘சரி, கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வந்து படி’ என்று அன்பாகச் சொன்னால் எந்தக் குழந்தைதான் புரிந்து கொள்ளாது?
நாம் வாழும் முறைதான் அவர்களுக்குப் பாடமாகிறது.
அன்போடும், பணிவோடும், நேர்மையோடும், பொறுமையோடும் வாழ வேண்டும் என்றும்,
பொறுமையே வெற்றிக் கனியைப்
பறித்துத் தரும் ஆயுதம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச்சொல்ல
வேண்டும்.
எனக்கு மூன்று மகனும், ஒரு மகளும். அவர்களை ஆண், பெண் வித்யாசமில்
லாமல்தான் வளர்த்தோம். என் கணவரும் வீட்டு வேலைகளில் எனக்கு நிறைய உதவுவார். பெண் செய்யும் வேலைகளை ஆண்களும் செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்து வளர்த்ததால் என் பிள்ளைகளும் அருமையாக சமையல் செய்வார்கள். அவர்களின் கைக்குழந்தைகளைக் கூட அழகாகக் குளிப்பாட்டுவார்கள். என் பெண்ணை டாக்டராக்க வேண்டும் என்ற குறிக்கோளில் வளர்த்தேன். எங்கள் இருவர் குடும்பத்திலும் முதல் டாக்டரானது என் மகளே.
ஆன்மிகம், பொது அறிவு, அறவுரைக் கதைகள் என்று புத்தகங்கள் நிறைய வாங்கி கொடுத்து படிக்க சொல்வேன். எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்பொழுதெல்லாம் மொபைல் இல்லாததால் பள்ளி, கல்லூரிக் கதைகளை சொல்வார்கள். நான் அவர்களுக்கு சமமாகப் பேசியதால் அவர்களும் எதையும் மறைத்ததில்லை. பள்ளி
விடுமுறை நாட்களில் திருப்பாவை,
திருவெம்பாவை, விஷ்ணு
சகஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களை சொல்லிக் கொடுத்து மனனம் செய்ய சொல்வேன். பள்ளியில் எல்லா போட்டிகளிலும் சேர்ந்து பரிசுகளும் பெறுவார்கள்.
வகுப்பில் முதலிடம்தான் பெற வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதில்லை. ஆனால் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் சிறந்த மேல் படிப்பு, வேலை வாய்ப்பு கிடைக்குமென்பதை அவ்வப்போது வலியுறுத்துவோம். அவர்களின் நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவார்கள். டிபன் சாப்பாடு என்று செய்து கொடுப்பேன். அவர்களும் என்னுடன் அமர்ந்து வீட்டுக் கதைகள் முதற்கொண்டு பேசுவார்கள்! சிரிப்பும், கும்மாளமுமாகப் பொழுது போகும். இப்பவும் என் பெண், பிள்ளைகளின் நண்பர்கள் போனில் பேசி விசாரிப்பார்கள்.
என் முதல் மகன் +2வில் தமிழ்நாட்டில் மாநில மூன்றாமிடமும், இரண்டாம் மகன் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்தார்கள்!
முதல்மகன் BITS Pilaniயில் இன்ஜினியரிங் முடித்து, நேனோடெக்னாலஜியில் Ph.Dபெற்று பெர்லின் யூனிவெர்சிட்டியில் பணியில் இருக்கிறான்.
இரண்டாமவன் மாநில முதலிடம் பெற்று KKR பாமாயில் கம்பெனியார் கொடுத்த மாருதி காரைப் பரிசாகப் பெற்றான்.
அப்போதைய முதல்வர் திரு கருணாநிதியிடமிருந்து மேல்படிப்பிற்கான தொகை பரிசாகப் பெற்றான். XIMபுவனேஸ்வரில் MBA முடித்து, CarnegieMellon University (US) ல் பயிற்சி பெற்று தற்சமயம் சென்னையில் EducationConsultant மற்றும் SkillTrain technology-enabled vocational training Course சொந்தமாகவும் நடத்தி வருகிறான்.
இதன் மூலம் அதிகம் படிக்காதவர்கள் கூட வீடியோ மூலம் மொபைல், மோட்டார் சைக்கிள், கம்ப்யூட்டர்,வீட்டு உபயோகப் பொருட்கள் ரிப்பேர் செய்வதை சுலபமாகக் கற்று சுயதொழில் செய்யலாம். 'எளிய மக்களையும் மேம்படுத்தும் நம் இந்திய நாட்டுக்கேற்ற திட்டம் இது' என்பான்.
மகள் மருத்துவர். கடைசி மகன் ஐஐடியில் M.Tech படித்து லண்டனில் வேலையில் இருக்கிறான்.
இரண்டாம் மகன் MBA படிக்கும்போது காலேஜில் அடிக்கடி பார்ட்டிகள் நடக்குமாம். அத்தனை மாணவ, மாணவிகளும் Alcohol பார்ட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அவன் சொன்னபோது நான் பதற்றமாக... நீயும் குடிப்பியா...என்றேன். 'பயப்படாதம்மா. எனக்கு அதன் நாற்றமே பிடிக்காது. எல்லாரும் என்னை கம்பெனி கொடுக்க சொல்வார்கள். நான்'எல்லாரும் கொஞ்ச நேரத்தில் flat ஆனா உங்க ரூம்க்கு கொண்டுவிட ஒருத்தர் வேண்டாமா?என்பேன்' என்று சொன்னபோது பெருமையாக இருந்தது!
ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் Ph.D செய்ய வாய்ப்பு கிடைத்தும் போக மறுத்துவிட்டான். நாங்கள் வற்புறுத்தியும் 'அங்கு படித்தால் எனக்கு அங்கேயே வேலையும் கிடைத்துவிடும். இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் உங்களை கவனித்துக் கொள்ள நான் இங்கு இருக்கிறேன். நான் எப்பவும் வெளிநாட்டில் வேலைக்கு போக மாட்டேன்' என்பான்.
ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வாழணும் என்பான். இப்பவும் குழந்தைகளுக்கு கூட நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் எல்லாம் போட அனுமதிக்க மாட்டான். பள்ளி விழாவில் நடனத்தில் சேர்ந்த என் பேத்திக்கு லிப்ஸ்டிக்,மை எல்லாம் போடக்கூடாது என்று ஆசிரியையிடம் சொல்லி விட்டான்! தற்சமயம் கொரோனாவால் பள்ளிகள்,அலுவலகங்கள் onlineல் இயங்குவதால் கடந்த எட்டு மாதங்களாக எங்களுடன் குடந்தையில் இருக்கிறார்கள்.
நான்கு பேரும் தம் குழந்தைகளை மிக சிறப்பாக வளர்ப்பதையும் நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். கடமைகளை முடித்துவிட்ட நாங்கள் தனியாக இருக்கிறோம் என்றபோது தட்டாமல்...உங்களுக்கும் ஓய்வும், தனிமையும் வேண்டாமா...என்று சொல்லி எங்களை அனுமதித்தான். அப்பா வெளியில் போக கஷ்டப் படக் கூடாது என்று ஒரு காரும், ஸ்கூட்டரும் வாங்கிக் கொடுத்தான். நம் கடமைகள் முடிந்தபின் நாம் பிள்ளைகளின் கூடவே இருப்பதைவிட விலகி இருந்து அவர்களை ரசிப்பது ஒரு சந்தோஷம்தானே! !
என் மகள் மும்பை கிராண்ட் மெடிக்கல் காலேஜில் படித்தாள்.அங்கு படிக்கும் சீனியர் மாணவனைக் காதலிப்பதாக சொன்னபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவன் மராத்திய பையன். அவனும் எங்கள் வீட்டுக்கு வருவான். மிக நல்ல பையன். நாங்களும் அவனது பெற்றோரும் அவர்களுடன் அமர்ந்து பேசினோம். 'உண்மையில் இருவருக்கும் விருப்பமா, இருவரும் வெவ்வேறு மொழி, கலாச்சாரம் ஒத்து வருமா' என்பதைக் கேட்டபோது இருவருமே...இது infatuation இல்லை.இருவருக்கும் விருப்பம் இருக்கிறது...என்ற பின்பே திருமணம் முடித்தோம். என் பெண்ணுக்கு 13,7 வயதில் இரு குழந்தைகள். மாமியார், மாமனார் இவர்களுடன்தான் இருக்கிறார்கள்.
இப்பொழுது என் பெண்ணின் மாமியார்...உங்கள் பெண்ணை மாதிரி மருமகள் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம். அருமையான பெண்...என்று பாராட்டும்போது 'ஆஹா நம் பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறோம்' என்று மிகப் பெருமையாக இருந்தது. வேலைக்கும் போய்க்கொண்டு, அவர்கள் சமையலையும் கற்றுக்கொண்டு, குழந்தைகளையும் சிறப்பாக வளர்ப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைகளை நல்லமுறையில் வளர்க்க எனக்கு தெரிந்த சில டிப்ஸ்...
*கெட்ட விஷயங்களிலிருந்து விலகி நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் எந்த நாளிலும் தவறான வழிக்கு செல்வதில்லை. அதிக கண்டிப்பும் கூடாது..எதையும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தவறு.
*பெற்றோரே குழந்தைகளின் ‘ரோல் மாடல்கள்’ என்பதால் பிள்ளைகளின் எதிரில் சண்டையிடுவதோ, பொய் பேசுவதோ, தவறுகளை மறைப்பதோ கூடாது. உன்னால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
*குழந்தைகளுக்கு அதிக வசதிகளைக் கேட்டதும் செய்து கொடுப்பதும், தனி அறை கொடுத்து படிக்க, உறங்கச் செய்வதும் அவர்கள் தகாத விஷயங்களைக் கற்றுக் கொள்ள வழி செய்யும். குழந்தைகளைத் தனிமைப் படுத்தல் கூடாது. அவர்களின் படிப்பு, நண்பர்கள் பற்றி அவ்வப்போது கேட்டு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்றோ அல்லது குழந்தை செய்த தவறை அடிக்கடி சுட்டிக் காட்டியோ அல்லது மற்ற பிள்ளைகளுடன் அவர்களை ஒப்பிட்டுப் பேசியோ அவர்களை நோகடிக்கக்கூடாது.எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
*அதிக கண்டிப்பும், பயமுறுத்தி அடக்கி வைத்தலும் குழந்தைகளை நம்மை விட்டு விலகச் செய்யும். குடும்பத்தின் வரவு செலவுக்கணக்குகள், தம்மை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு பெற்றோர் உழைக்கிறார்கள் என்பதை அவர்களும் தெரிந்து கொள்ளும்படி எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நம் கஷ்டம் குழந்தைகளுக்கு தெரியக் கூடாது என்று நினைத்து மூடி மறைப்பது தவறு.
*பெற்றோர் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் மரியாதையுடன் நடந்து கொண்டு குழந்தைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். நம் பெற்றோரின் வழிகாட்டல் சரியானது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
*வெளியுலகத்தில் அவர்கள் பல விஷயங்களையும் பார்க்க நேரிடுகிறது. சமயங்களில் மனதில் பதட்டமும், கோபமும், வெறுப்பும், இது சரியா தவறா என்ற சந்தேகங்களும் ஏற்படும்போது அதை வீட்டிலுள்ள பெற்றோரிடம் தயங்காமல் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பெற்றோர்கள் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டும். நல்லவற்றை பின்பற்றி அல்லவைகளை அகற்றும் அறிவு அவர்களுக்கு இருக்க வேண்டும்.நாமே அவர்களின் முன்னுதாரணமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
எந்தத் துயர் வரினும் இறைவனைப் பிரார்த்தனை செய்வது மனதுக்கு அமைதியும், பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும் என்பதை அவர்கள் உணரும்பொருட்டு பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதும் பெற்றோரின் கடமை.
கருத்துகள்
கருத்துரையிடுக