என் மகிழ்ச்சி பேரக் குழந்தைகளுடன்..




நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததில் அளவற்ற மகிழ்ச்சி அடைவதுடன் , அவ்வப்போது அதை ஆனந்தமாக அனுபவிக்கவும் தவறியதில்லை. நம் குழந்தைகளிடம் காட்டும் கண்டிப்பை நம் பேரக்குழந்தைகளிடம் நம்மால் காட்ட முடிவதில்லை.


எட்டாம் வகுப்பு படிக்கும் என் பிள்ளை வயிற்று பேத்தி ப்ரீத்தி மிகவும் புத்திசாலி. நானும் ப்ரீத்தியும்  நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய கேள்விகள் கேட்பாள். கதைகள் சொல்வேன். ஒருமுறை அவளுக்கு பாரி கதையை சொன்னேன்.

'அந்த காலத்தில் பாரி என்ற அரசன் ஒருவர் பரம்பு என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்'

'இரு பாட்டி.. இயற்கைன்னா?'

ஆங்கில மீடிய குழந்தைகளுக்கு தமிழ் புரிவதில்லையே!

'இயற்கைன்னா nature.புரிஞ்சுதா?'

'ஓ..புரிஞ்சுது. அதாவது beautiful flowers, cute animals, big trees அதல்லாம்தானே?'

'ஆமாம். அவர் அடிக்கடி காட்டுக்கு போய் மரம் செடி கொடியல்லாம் ரசிச்சுட்டு வருவார்'

'அப்டீன்னா?'

'Enjoy பண்றதுனு அர்த்தம். அப்படி ஒரு முறை தன் தேர்ல ஏறி காட்டில் பாரி போய்க் கொண்டிருந்தபோது ஒரு முல்லைப்பூ கொடி ஒண்ணு கீழ விழுந்து கிடந்தது.'

'கொடின்னா..national flagதான?'

'இல்ல climber. நீ படிச்சிருப்பயே climberனா என்ன?'

'ஓ..அதுவா? ..cucumber, bitter guard, jasmine அதெல்லாம்தான..கரெக்டா?'

'கரெக்ட். முல்லைப் பூங்கற்து jasmine மாதிரி பூ. அது climb பண்ண முடியாம கீழ விழுந்து கிடந்தது. காட்டில யார் அதுக்கு கொம்பு நட்டு படர விடுவா? அதைப் பார்த்த பாரிக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுத்து.'

'நீ சொல்ற மாதிரி பாவம்னாரா?!'

எனக்கு சிரிப்பு வந்தது.என்னை எவ்வளவு தூரம் இவள் கவனித்திருக்கிறாள் என்று பெருமையாகவும் இருந்தது!

'அதை நிமிர்த்தி நிறுத்த அங்க மரம் எதுவும் இல்ல. உடனே பாரி என்ன பண்ணினார் தெரியுமா? தன்னுடைய தேரை அது பக்கத்துல நிறுத்தி அந்த செடியை அதில் ஏத்தி விட்டார்.'

'அவர் great பாட்டி! ஒரு குட்டி செடிக்காக தன்னோட costly தேரையே விட்டுட்டு வந்துட்டாரா?'

'ஆமாம். அதனால் அவரை எல்லாரும் புகழ்ந்து 'பாரி வள்ளல்'னு பாராட்டினா'

'wait..wait..வள்ளல்னா?'

'யாராவது கஷ்டப்பட்டா அது மனுஷாளோ அனிமலோ பறவையோ..அதுக்கு தன்னைப் பற்றி நினைக்காம ஹெல்ப் பண்றவாளுக்கு தமிழ்ல வள்ளல்னு பேர்'

'ஓ..அப்படியா?'

'அதுபோல நாமளும் யார் கஷ்டப்பட்டாலும் நம்மால முடிஞ்ச  help பண்ணணும்..கதை பிடிச்சுதா?'

'சூப்பர் பாட்டி' என்றவள் ஏதோ யோசித்து,
'பாட்டி என்னோட கீழ வாயேன்' என்றாள்.

அங்கு அழகிய நாய்க்குட்டி ஒன்று படுத்துக் கொண்டிருந்தது. இவளைப் பார்த்ததும் வாலை ஆட்டிக் கொண்டு சற்று நொண்டியபடி ஓடி வந்தது.

'இந்த பப்பி ஒருநாள் நொண்டிண்டே நம்ம பில்டிங் வாசல்ல நின்னுண்டிருந்தது. வாட்ச்மேன் விரட்டினார். நான் பிஸ்கட் போட்டு உள்ளே அழைச்சுண்டு வந்தேன். பாவம்தான பாட்டி இது?'

'அழகா இருக்கே' நான் அதன் முதுகைத் தடவ வேகமாக வாலை ஆட்டியது.

'உனக்கு நாய் வளர்க்க ரொம்ப பிடிக்கும்னு அப்பா சொன்னாளே'

'ஆமாம். சின்ன வயசுல வளர்த்திருக்கேன்.மேல சொல்லு'

'அன்னிலருந்து இங்கயே இருக்கு. நான் தினமும் பிஸ்கட் போடுவேன். இப்பல்லாம் என் ஃப்ரண்ட்ஸும் போட்றா. அது கால் சீக்கிரம் சரியாகணும்னு godகிட்ட வேண்டிக்கோ பாட்டி'

'நிச்சயம் சரியாயிடும். நாயைத் தொட்டா மறக்காம கை அலம்பு.'

'பாட்டி..நானும் பாரி மாதிரி நல்லவதான? அவர் ராஜா..தேர் கொடுத்தார். எனக்கும் இந்த பப்பியை வீட்டுல வளர்க்க ஆசைதான். ஆனா அம்மா கோச்சுப்பா. அதனால தினமும் அதுகூட விளையாடிட்டு பிஸ்கட் ப்ரெட்லாம் போட்றேன்.'

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த வயதில் அவளின் அன்பு என்னை ஆச்சரியப் படுத்தியது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டேன். 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்'என்ற பாரதி பாடல் நினைவு வந்தது.

"எனக்கு Veterinary doctor ஆகதான் ஆசை. நாய் பூனைக்கு மட்டுமில்ல, ஃபாரெஸ்ட் அனிமல்க்கும் நான் உடம்பு சரியில்லாட்டா மருந்து தருவேன்" என்பாள் தைரியமாக!

இப்பொழுது Blue Crossல் சேர்ந்து ஒவ்வொரு ஞாயிறன்றும் சென்று நாய்களுடன் நேரம் செலவழித்து சந்தோஷப் படுகிறாள்.

தற்சமயம் கொரோனாவால் படிப்பு, வேலையெல்லாம் onlineல் நடப்பதால் என் பிள்ளை குடும்பத்துடன் சென்னையிலிருந்து நாங்கள் இருக்கும் குடந்தைக்கு வந்து கடந்த ஒன்பது மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள்.

இங்கு நான் வளர்க்கும் நாய் என் பேத்திகளுக்கு பிடித்துவிட, அதற்கு லோக்கி என்று பெயர் வைத்து மிக ஆசையுடன் வளர்த்து வருகிறாள். தினமும் எழுந்தவுடன் அதைப் பார்த்து ஹலோ சொன்னபின்தான்  பல் தேய்ப்பாள். தான் சாப்பிடுகிறாளோ இல்லையோ லோக்கிக்கு வேளா வேளை சாப்பாடு போட்டு விடுவாள்!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்  என் மகள் வயிற்று பேரன் க்ஷிதீஜும் நானும் ஜாலியாகப் பேசுவோம்! Swimming, Skating, Football என்று எல்லா விளையாட்டிலும் திறமைசாலி. ஃபுட்பால் நன்றாக விளையாடி முன்பு படித்த பள்ளியில் பரிசுகள் வாங்கியுள்ளான். அவன் ஆர்வம், திறமை அறிந்து அவனை ஃபுட்பால் வீரனாக்க எண்ணிய அவன் பெற்றோர் The Sport School பெங்களூரில் சேர்த்து அங்கு படிப்புடன் சிறந்த பயிற்சியும் தருகிறார்கள்.

விளையாட்டு பற்றி என்னுடன் ஃபோனில் பேசுவான். எனக்கு புரியாதவற்றை சொல்லித் தருவான்.அவன் வகுப்பில் 'உன் வீட்டில் உனக்கு பிடித்தவரைப் பற்றி எழுது'என்றபோது, 'என் பாட்டிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'என்று கட்டுரை எழுதினானாம்! இதைக் கேட்டபோது எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது.

நான் அவன் வீட்டுக்கு சென்றபோது 'பாட்டி உனக்கு Mojito Mocktail பண்ணித் தரேன். சூப்பரா இருக்கும்.குடிச்சுப் பாரு' என்றான்.நான் 'என்னது மோக்டெய்லா?அப்படின்னா?' என்றேன்! அவனோ 'பயப்படாத. அதில் ஆல்கஹால் இல்ல. ஸோடா சேர்த்து பண்ற ஜூஸ்' என்றான். என்ன செய்கிறான் என்று கூட இருந்து பார்த்தேன்.

சில புதினா இலைகள், சர்க்கரை, எலுமிச்சை துண்டுகள் சேர்த்து நசுக்கி அதில் எலுமிச்சை சாறு,soda,icecubes சேர்த்து கலக்கி இரண்டு glass களில் ஊற்றி என்னிடம் ஒன்றைக் கொடுத்து 'Cheers..குடி பாட்டி' என்றான். அருமையாக இருந்தது mocktail! நம் குழந்தைகள் செய்து கொடுத்து சாப்பிடுவதை விட பேரன், பேத்திகளுடன் அவர்களுக்கு இணையாகப் பேசுவதும், அவர்கள் செய்து கொடுத்து சாப்பிடுவதில் சந்தோஷம் ஜாஸ்திதான்!
ராதாபாலு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)