திரும்பிப் பார்க்கிறேன்..


உங்கள் சிந்தனை உங்கள் எழுத்து


கடவுளால் அளிக்கப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மிகச்  சிறப்பானவையே என்பது என் எண்ணம்.


அன்பான பெற்றோர், அருமையான கணவர், அழகான குழந்தைகளை அடைந்த நேரம் பெற்றது பெருமகிழ்ச்சி!

தமிழகத்தைத் தாண்டாத எனக்கு திருமணமாதும் வடக்கே வாழும் வாய்ப்பு. கணவருடன் கைகோர்த்து கண்மலர்ந்து தாஜ்மகாலை ரசித்து அதன் அழகில் சொக்கிய நேரம் மறக்க முடியாத சொக்கத் தங்கத் தருணம்!

பின் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட அவர்களின் படிப்பு  மற்றும் இதர திறமைகளில் ஊக்குவித்து அவர்களைப் பத்தரை மாற்றுத் தங்கங்களாக  உயர்த்த நேரம் போனதே தெரியாமல் உழைத்த நாட்கள் மறக்கமுடியாதவை!

மூத்த மகன் +2வில் தமிழகத்தில் மாநில மூன்றாமிடமும், அடுத்த பிள்ளை +2வில் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்த பொன்னான நேரங்கள் நினைக்கும்போதே மனம் நிறைப்பவை!

இரண்டாம் மகன் +2வில் Commerce பிரிவு எடுத்து மாநில முதலாக வந்து திரு சேஷன், அன்றைய முதல்வர் திரு கருணாநிதி ஆகியோரிடம் பரிசுகள் பெற்றதோடு KKR பாமாயில் கம்பெனியாரின் மாருதி கார் பரிசு பெற்றதும் என் வாழ்வின் ஜொலிக்கும் வைர வேளைகள்!

என் மகள் மருத்துவரானதும், கடைக்குட்டி மகன் IITயில் M.Tech படித்து சிங்கப்பூரில் வேலைக்கு சென்றதும் 'என் செல்வமே' என்று அவர்களைப் பாராட்டிப் பரவசமடைந்த அற்புத நேரங்கள்!

மாற்றுக் குறையாத தங்கம் போன்ற மருமகள்களும், மாணிக்கம் போல் மாப்பிள்ளையும், நவரத்தினங்களாக பேரன் பேத்திகளும் கிடைத்த நேரங்கள் ஒரு நல்ல சிறப்பான வாழ்க்கை கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறிய  நல்ல தருணங்கள்!

புத்தகங்களில் மட்டுமே படித்தறிந்து அவற்றின் அழகில் சொக்கிப்போன பாரிஸையும், ஸ்விஸ்ஸையும், லண்டனையும் பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்ட எனக்கு அவை மட்டுமல்லாமல் கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம், பாலியின் இந்து ஆலயங்கள், பாங்காக்கின் டைகர் டெம்பிள்,ரோமின் கொலோசியம், வாடிகனின் புகழ் பெற்ற சர்ச், லண்டன்  பக்கிங்காம் அரண்மனை, சிங்கார சிங்கப்பூர் சுற்றுலா தலங்கள், மலேசியாவின் பத்துமலை குகைக் கோயில் என்று பல நாடுகளையும் கண்டு மகிழக் கிடைத்த  வாய்ப்புகள் மனம் நிறைந்த மகிழ்ச்சித் தருணங்கள்!

பேரன் பேத்திகளுடன்..

பாரத நாட்டின் பல ஆலயங்களை தரிசித்திருந்தாலும் சமீபத்தில் சென்று தரிசித்த  சார்தாம் யாத்திரையில் கேதார்நாத் ஈசனை தொட்டு வணங்கியபோது 'பொன்னார் மேனியனை தரிசித்து பிறந்த பயனை அடைந்து விட்டோம்' என்று மெய்சிலிர்த்த தெய்வீகத் தருணம்!

முப்பது வருடங்களாக தமிழ் இதழ்களில் கதை, கட்டுரை, போட்டிகளில் எழுதி அவை பிரசுரமாகி அவற்றை இதழ்களில் கண்டு சந்தோஷிக்கும் நேரம் பொன்னே கிடைத்ததாய் மகிழ்ந்த பொழுதுகள்!

நான் போடும் பலவகைக் கோலங்கள், இசையுடன் இயைந்து பாடும் கீர்த்தனைகள், விதவிதமாய் செய்யும் பாரம்பரிய மற்றும் புதுவித சமையல்கள், என் blouseகளில் நானே உருவாக்கி தைக்கும் டிசைன்கள், அழகிய கைவேலைகள்..இவற்றை மனம் ஒன்றி செய்து அவை சிறப்பாக அமையும்போது அவை நானே மகிழும் நேரங்கள்! இன்னும் இதுபோல் நிறைய்...ய!

ஒரு இல்லத்தரசியாக இருந்து எல்லா கடமைகளையும் முடித்து என் கணவருடன்  இனி இறை சிந்தனையுடன் வாழும்  வானப்ரஸ்த வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும்  இந்த நாட்களில் என் இனிய  நினைவுகளை மாம்ஸ்பிரஸ்ஸோவில் எழுதி பகிர்வது எனக்கு ஆனந்தமளிக்கும் நேரங்களே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)