சென்னையின் நினைவுகள் சொல்லி மாளாது! 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்தபோது 'சங்கு ஊதும் போதெல்லாம் வெளியில் யாரும் வரக்கூடாது. தெருவில் அப்படியே படுத்து விட வேண்டும்' என்ற அறிவிப்பு ரேடியோவில் கேட்கும்போது வெளியில் போகவே பயமாக இருக்கும். வெளியூர் சொந்தங்களின் வீட்டுக்கெல்லாம் போனால் 'நீ மெட்ராஸ்காரியாச்சே' என்பார்கள்! நாங்கள் கோடம்பாக்கம் அருகில் இருந்ததால் 'சிவாஜி, M.G.R., பத்மினி, K.R.விஜயாவை யெல்லாம் பார்த்திருக்கியா' என்று விழி விரியக் கேட்பார்கள், நாங்கள் ஏதோ ஸ்டூடியோவிலேயே குடியிருப்பது போலவும், அவர்கள் எங்கள் வீட்டு வழியே தினமும் நடந்து செல்வது போலவும்!! சென்னையை சுற்றிப் பார்க்கவென்றே அடிக்கடி உறவினர்கள் வருவார்கள்! LIC கட்டிடம் அந்நாளைய கண்காட்சித் தலம்! அதைக் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து ஆச்சரியப் பட்டதுண்டு!இன்று அதைவிட உயரமான அடுக்கு மாடிக் கட்டிடங்களில் குடியிருக்கிறோம்! ஒருமுறை விஜய வாஹினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் பார்த்ததுண்டு. ஒரே காட்சியை பல தடவை திரும்பத் திரும்ப நடித்ததைப் பார்த்து 'ஐயோபாவம் நடிகர்கள்' என்ற எண்ணம்தான் தோன்றியது!...
கருத்துகள்
கருத்துரையிடுக