இந்தநாள்..நல்லநாள்!(4.3.'21)


 

#நான்எழுதுகிறேன்..#சவாலை ஏற்போம்..இனிய இல்லறத்தில் இணைந்து பணி செய்வோம்!

இந்தநாள்..நல்லநாள்!

மார்ச் எட்டு தான் எங்கள் திருமண நிச்சயதார்த்த நாள்! அப்பொழுதெல்லாம் மகளிர் தினமெல்லாம் என்னவென்றே தெரியாது! எத்தனை வருஷமானாலும் அந்த இனிய நாளை மறக்க முடியுமா?

..நம்ம கல்யாணம் ஆன புதிசில உங்களுக்கு என்கிட்ட ரொம்ப பிடிச்சது என்ன?..

..நான் சொன்னா நீ கோச்சுக்க கூடாது. சரியா?..

..நிச்சயம் இன்னிக்கு கோச்சுக்க மாட்டேன்..

..கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரம் கழித்து முதன் முதலா  நீ ஒரு ரவா உப்மா..

..நிறுத்துங்கோ! நான் பண்ணின உப்மா சரியில்லனு சொல்லப் போறேளா? நான் கேட்டது வேற..

..நான் சொல்லி முடிக்கவே இல்ல. கோச்சுக்காத. அந்த கொழகொழ உப்மாவை பண்ணிட்டு உன் மாமியார்கிட்ட கமெண்ட் வாங்கிண்டு பாவமா நின்னியே..அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்ல வந்தேன்..

..உடனே நீங்க என் ஜாதகத்தை ஒரு ஜோஸ்யர்ட்ட காமிச்சு 'இந்தப் பொண்ணுக்கு சமையல் வருமா'னு கேட்டவர்தான..

..அது அப்போ. இப்போ நான் உன் அடிமை. நீ எது சொன்னாலும் தட்டாம பண்ற புருஷன்..

...ஆமாம். இதுக்கொண்ணும் குறைச்சலில்ல..

..நல்ல நாள்ள கோபப்படாத!இன்னிக்கு எல்லா வேலையும் நான்தான் பண்ணப் போறேன். சமையலும் பண்ணுவேன்..
ஆனா பூஜை பண்ணணும். அதனால  அதை மட்டும் நீ
பண்ணிடு...

அட..எலி தானா வந்து வலையில் மாட்டிடுத்தே! பருத்தி புடவையா காச்ச மாதிரிதான். Enjoy என என் மனசு குதூகலிக்க..

...ஒரு கண்டிஷன். நீங்க பண்ற வேலையெல்லாம் நான் ஃபோட்டோ எடுப்பேன். எதுவும் சொல்லக் கூடாது.ஓகேயா?...

...ஓ.. ஃபோட்டோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்பப் போறயா? தாராளமா அனுப்பு...

அப்பா எவ்வளவு ஆதரவாக இருக்கிறார் என்று அவர்களும் புரிந்து கொள்வார்களே!

திருமணத்தின் போது என் வயது 18. ஏதோ ஓரளவு சமையல் தெரியும். பள்ளிப் படிப்பு முடித்து வீட்டில் இருந்த இரண்டு வருடங்களில் என் அம்மாவின் மூன்று நாட்கள் மட்டுமே..அதுவும் என் அப்பா துணையுடன் சமைத்த அனுபவங்கள் மட்டுமே!

திருமணமாகி வந்தவுடன் 'நீதான் இனிமேல் சமையல்' என்று என்னை சமைக்க சொல்லிவிட்டு தான் ஹாயாக ஹாலில் போய் உட்கார்ந்து விட்டார் என் மாமியார்! 'அம்மா..இந்த உப்பு போறுமா' என்றால் 'எனக்கு அப்படிலாம் சொல்லத் தெரியாது. நிதானமா போடு' என்பார். நிதானமான்னா...மெதுவாவா?!

திருமணமானால் ஜாலியா இருக்கலாம் என்று கனவு கண்ட என் நினைப்பு அன்றே புஸ்வாணமாயிற்று! ஏதோ தட்டுத் தடுமாறி சமைக்க ஆரம்பித்தேன். இருவருமே தஞ்சையை சேர்ந்தவர்கள் என்பதால் சமையலில் அதிக வித்யாசமில்லை!

உப்மா அனுபவத்திற்கு வருவோம்! புகுந்த வீட்டில் முதன்முதலாக டென்ஷனோடு செய்த உப்மா! அந்த உப்மா..என்னாலயே சாப்பிட முடியவில்லை! என் கணவருக்கு உப்மாவே பிடிக்காதாம். 'உன் உப்மா சாப்பிட்ட பிறகு உப்மாவை சுத்தமா மறந்தே விட்டேன்' என்றார்.

(உப்மா சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று ஒரு இதழில் படித்தேன். உப்மா வயிற்றில் ஊறி உப்பிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் போய் விடுமாம். அதனால் மனைவியர்களை உப்மா செய்து கணவருக்கு சாப்பிட கொடுக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வேறு!!)

என் மாமியாரோ 'உன்னை பெண்பார்க்க வந்தப்போ உங்கம்மா மைசூர்பாகு நன்னா பண்ணிருந்தாளே. உனக்கு தெரியுமா?' என்ற கேள்வி வேறு!

என் வீட்டுக்கு போகும்போது அம்மாவிடம் ஸ்வீட்லாம் செய்ய கத்துண்டு வருவேன்.எந்த
சமையல் புத்தகம் பார்த்தாலும் வாங்கி விடுவேன். என்னைப் பொறுத்தவரை மீனாட்சி அம்மாளின் சமைத்துப்பார் is the best! அளவுகள் அப்பழுக்கின்றி இருக்கும்.

அதன் பின்பு எல்லா சமையலும் செய்து பார்த்து கற்றுக் கொண்டேன். ரவா உப்மாவை என் கணவரே 'இன்னிக்கு ரவா உப்மா பண்றயா?சாப்ட்டு நாளாச்சு' என்கிற நிலை!

பல ரெசிபிகள் நன்றாக வரும்..சில காலை வாரும்..(சரியா வராத ரெசிபிகளை மத்தவா கண்லயே காமிக்க மாட்டேன்!!) இன்று நானே புதிதாக செய்யும் அளவு தேறியாச்சு. அப்பப்ப தமிழ் magazinesல போட்டிக்கல்லாம் போட்டு ப்ரைஸ்லாம் வாங்கியாச்சு. இப்போ 25 பேருக்கு ஈஸியாக சமைக்க முடியும்.

என் கணவர் வீட்டு வேலை செய்வதில் கில்லாடி! எல்லா வேலைகளிலும் அவர் உதவி உண்டு! என் மாமியாரும் அவருமாக இருந்தபோதே அம்மாவுக்கு கிச்சனில் ஹெல்ப் பண்ணியிருப்பதால் பல வேலைகள் தெரியும்.

குழந்தைகள் ஸ்கூல் போகும் நாட்களில் நான் சமையலில் பிஸி. அப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்டி யூனிஃபார்ம் போட்டு தலைவாரி நெற்றியில் விபூதி இட்டு, (என் பெண்ணுக்கு மட்டும்தான் நான் பண்ணுவேன்)புத்தகங்கள் எடுத்து வைத்து... இப்பவும் 'அப்பா மாதிரி நீ perfect இல்லமா' என்பார்கள்  குழந்தைகள்!

சமையலும் நன்றாக செய்வார். கால்கிலோ உருளை, சேம்பு கறி பண்ண...என்ன ஒரு கால் கிலோ நெய் போறும்!!! மொறுமொறுனு ரோஸ்ட் ஆகிருக்கும். இப்பவும் என்னிடம் 'கறிக்கு இன்னும் நெய் விட்டு ரோஸ்ட் பண்ணணும்'பார்!

நான் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது,  அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு என் கூடவே இருந்து என்னைக் குனிய விடாமல் பாத்ரூமில் ஸ்டூல் போட்டு நான் குளித்ததும் என் துணிமணிகளை துவைத்து உலர்த்தி வேளா வேளைக்கு கையில் மருந்து கொடுத்து தாய்போல் பார்த்துக் கொண்டார். 

எனக்கு காலில் Vericose vein ஆபரேஷன் ஆனபோதும் ஒன்றரை மாதம் என்னை நடக்கக் கூடாது என்று டாக்டர் சொன்னதால் அவர்தான் அத்தனை வேலைகளும் செய்தார். இப்படி ஒரு கணவரை அடைய நான் என்ன தவம் செய்தேனோ என்று கடவுளுக்கு நன்றி சொல்வேன்.

இப்பொழுது நாங்கள் மட்டும் தனியாக இருப்பதால் அதிக வேலை கிடையாது. ஆனாலும் 'நானும் ஹெல்ப் பண்ணுவேன்' என்று காய்கறி நறுக்குவது, துணி உலர்த்துவது, பாத்திரம் தேய்ப்பது எல்லா வேலையும் செய்வார். கருவடாம் பிழிவது, சீடை உருட்டுவது என்று எல்லாம் செய்வார்! கேட்டால் 'பெட்டர் ஹாஃப் னா இப்படிதான் இருக்கணும்' என்று விளக்கம் வேற தருவார்!

*சில ஆண்கள் 'நானாவது சமையல் செய்வதாவது. அதெல்லாம் பெண்கள் வேலை' என்று சொல்வதைக் கேட்டாலே எனக்கு கோபம் வரும்.

*திருமணத்தின்போது 'நீயும் நானும் நண்பர்கள்' என்று உறுதி எடுத்துக் கொண்டு இணையும் கணவன் மனைவி நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்வதுதானே சரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு