என் குழந்தை..என் ஆசான்(7.2.'21)

 என் ஆசான்..என் குழந்தை..


ஏழாவது படிக்கும் என் பேத்தி மிகவும் சமர்த்து..புத்திசாலி.
அவள் பள்ளி பற்றியும், படிப்பு , டீச்சர்கள் பற்றியெல்லாம் பேசுவாள்.
...நீ படித்துவிட்டு என்னவாகப் போற?...என்றேன்.

...நான் veterinary doctor ஆகப் போகிறேன்....

...நாய், பூனைக்கல்லாம் மருந்து கொடுத்து ஊசியல்லாம் போடணுமே...

...நான் forest animalsக்கல்லாம் கூட  மருந்து கொடுப்பேன்...

...அதல்லாம் வேண்டாம்.Wild animalsலாம் பயம்...

...ஐயோ..உனக்கு ஒண்ணுமே தெரியலயே.பயப்படாத பாட்டி. மயக்கம் கொடுத்துதான் பண்ணுவேன்...

அனிமல் பிளானட், ஒயில்டு லைப் டாகுமெண்டரி, நேஷனல் ஜாக்ராபிக் அனிமல் லைஃப் போன்ற அலைவரிசைகளை விரும்பிப் பார்ப்பாள். பல விலங்குகளை பற்றிய விஷயங்களையும் மிக அழகாக எடுத்துச் சொல்லுவாள்.

சிங்கம் இப்படி சாப்பிடும், கரடி இப்படி சண்டை போடும் என்றெல்லாம் அவள் விழிமலர சொல்லும்போது, இப்பொழுதே அவள் veterinary டாக்டர் ஆகிவிட்ட மாதிரி தோன்றும்!

நான் சில விஷயங்களைப் பற்றி யோசித்து 'இது நம்மால் முடியாது..என்று கைவிட்டு விடுவேன். ஆனால் என் பேத்தி தன் குறிக்கோளில் இந்த வயதிலேயே உறுதியாக இருப்பது எனக்கு வியப்பளித்ததுடன், எனக்கும் பாடமாக அமைந்தது.

அவள் பள்ளி பற்றியும், ஆசிரியைகள், நண்பர்கள் பற்றியும் கேட்டேன்.

...பாட்டி உனக்கு தெரியுமா.எங்க science டீச்சரோட அப்பா godகிட்ட போயிட்டாராம். டீச்சர் க்ளாஸ்ல வந்து அழுதா...

...உங்ககிட்ட அதல்லாம் சொன்னாளா?...

...எங்க கிளாஸை அவாளுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அந்த டீச்சரை console பண்ணினேன்...

...நீயா..என்ன சொன்ன?...

...ஏன் அழறீங்கன்னேன்.அப்பா எங்களை விட்டு போய்ட்டார். எனக்கு தாங்க முடியல.அழறேன்னா...
...உங்களால
தாங்க முடியாதுதான் மிஸ்..But இதல்லாம் nature.
நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது மிஸ். நீங்க இன்னும் கொஞ்சநாள் வீட்ல இருந்துட்டு வந்திருக்கலாம்...னேன்.

...வீட்ல அம்மாவைப் பார்த்தா ரொம்ப அழுகை வரது.அதான் உங்களோடல்லாம்
இருந்தாமனசை லேசாக்கிக்
கலாம்...னு வந்தேன்னா.

..நீ போய் பெரிய மனுஷி மாதிரி டீச்சருக்கு ஆறுதல் சொன்னியா?!..

...நான் சொன்னது சரிதான பாட்டி. என்னைக் கட்டிண்டு..இவ்வளவு அழகா பேசறியே..னு praise பண்ணினா...

எனக்கு மிக ஆச்சரியம்! இந்தக் குழந்தை எப்படி இதல்லாம் பேசியிருக்கிறாள். எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையையும் இயல்பாக, லகுவாக அணுகும் குணம் அவளுக்கு இருக்கும் என்று மனதில் சந்தோஷம் ஏற்பட்டது.

இது எனக்கும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன். எந்த கடினமான சூழ்நிலையிலும் மனதைத் தளரவிடாமல் அடுத்த காரியத்தை செய்வது பற்றி யோசிக்க வேண்டும் என்பது அவசியம் என்று புரிந்தது.

அவள் கூடப் படிக்கும் பையன் ஒருவனுக்கு கால் முட்டியில் knee cap இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப் பட்டாள்.

...அவன் ஒரு காலை வளைக்காமல் நடப்பான் பாட்டி. பாக்கவே பாவமா இருக்கும். God ஏன் இப்படி
யெல்லாம் பண்றாரோ? எங்க கிளாஸ் மாடில.அவன் டெய்லி வரும்போது நான் கீழ போய் அவன் பையை மேலே எடுத்துண்டு வந்து கொடுப்பேன்...

..சமத்து. இன்னும் யாருக்கல்லாம் ஹெல்ப் பண்ணுவ?..

...எங்க கிளாஸ் மிஸ் எங்க நோட்புக்ஸ்லாம் எடுத்துண்டு staff room   போகும்போது நான் அவாகிட்ட வாங்கிண்டு போய் கொடுத்துட்டு வருவேன்..

இப்படி உதவும் மனோபாவம் இருக்கும் குழந்தைநாளை நல்ல குழந்தையாக வளர்ந்து நன்கு முன்னேறுவாள் என்ற நம்பிக்கை வந்தது.

நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வது போல் நாமும் சில விஷயங்களை அவர்களிடமிருந்து கற்க முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)