சுனிதா மாறினாள்!(28.2.'21)

வார இறுதி எழுத்து திருவிழா

சுனிதா மாறினாள்!

வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு மிகவும் சுத்தமாக இருந்ததை பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனார் லட்சுமியம்மாள்.

"என்ன வீடு இவ்வளவு சுத்தமா இருக்கே. வேற ஆள் வச்சுக்கிட்டயா பாப்பா" என்றபடியே வந்தவள் சுனிதா சொன்னதைக் கேட்டு "என் கண்ணு. நல்லாருக்கயா" என்றபடி குழந்தையை முத்தமிட்டாள்.

வாசுவுக்கு எப்போதும் டூர். மாதம் நான்கு நாள்தான் வீட்டு வாசம். சுனிதா வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். அவள் பெற்றோருக்கு செல்லப்பெண். 

வாசுவின் பெற்றோர் உடனிருந்தபோது அவன் அம்மா வீட்டை சுத்தமாக வைத்திருப்பார். சுனிதாவுக்கு எப்பொழுதும் சுத்தம் கிடையாது.அவள் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால் ஒரு சின்ன வேலைக்கு கூட அடுத்தவரை ஏவி வேலை பார்க்க சொல்பவள். 

எப்பொழுதும் மொபைலில் தோழிகளுடன் பேச்சு, டி.வி, தூக்கம் என்று எதிலும் ஆர்வமின்றி இருந்தாள். வாசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் மாறுவதாக இல்லை. 

இரண்டு வருடத்தில் குழந்தை பிறந்தபோது வாசு குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இனியாவது அவள் மாறிவிடுவாள் என்று எதிர்பார்த்த வாசுவுக்கு கிடைத்தது ஏமாற்றம்தான்.

கிராமத்திலிருந்த வாசுவின் தந்தையின் வயதான பெற்றோரை கவனிக்க அவர்கள் கிராமத்தோடு செல்ல வேண்டிய தாயிற்று. வாசுவுக்கு  வேலையில் உயர்வு கிடைத்து அடிக்கடி வெளியூர் டூர் செல்ல வேண்டியிருந்தது. 

அவன் அம்மாவுக்கு சுனிதா எப்படி குழந்தையுடன் தனியாக சமாளிப்பாள் என்ற கவலை. 

அவர்கள் வீட்டில் பல நாட்களாக வேலை செய்யும் லக்ஷ்மியை வாசு ஊரில் இல்லாத நாட்களில் இரவு தங்கியிருக்க சொல்லியிருந்தாள். 

சுனிதாவும் கவலையின்றி குழந்தைக்கு பால் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று எப்பவும் போல் ஜாலியாக மொபைலிலும் டி.வி.யிலும் பொழுதைக் கழித்தாள். 

வாசுவுக்கு அவள் செய்வது சற்றும் பிடிக்காமல் அறிவுரை சொல்லியும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!

லக்ஷ்மிக்கு  அவசரமாக  ஊருக்கு போக வேண்டிய வேலை வர, சுனிதாவிடம் குழந்தையை நல்லபடி பார்த்துக் கொள் என்று சொல்லி சென்றவள் வேலை  முடியாததால் ஒரு வாரத்தில் வருவதாக ஃபோன் செய்தாள். 

வேலையே செய்து அறியாத சுனிதாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி ஆகிவிட்டது. தவழ ஆரம்பித்த குழந்தை கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித்திருந்தான். 

மாலை வாசு வந்துவிடுவான் என்பதால்  சமையலை ஆரம்பித்தாள். வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது ஏதோ ஃபோன் வர, அந்தப் பேச்சில் மூழ்கியவள் உலகமே மறந்து பேசத் தொடங்கி விட்டாள். 

குழந்தை ஹாலில் இருந்தான். திடீரென்று குழந்தையிடமிருந்து ஏதோ மூச்சுத் திணறுவது போல் சத்தம் வர அருகில் வந்து பார்த்தவள் குழந்தையின் கண்கள் செருகிக் கொண்டு மயக்கமாக பயந்து அடுத்த வீட்டுக்கு ஓடினாள். 


 "அக்கா. குழந்தை கண்செருகி மயக்கமாகி விட்டான். ப்ளீஸ்..டாக்டரிடம் போக உடன் வாங்க" என்று பதட்டத்துடன் டாக்டரிடம் போனார்கள்.


பரிசோதித்த டாக்டர் 'ஏம்மா குழந்தை இருக்கும் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டாமா? வெயிட் பண்ணுங்க' என்றவர் குழந்தையுடன் சென்று கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு பின் குழந்தை அழுகை சத்தம் கேட்டது.


வெளியில் வந்தவர் 'குழந்தை ஏதோ ப்ளாஸ்டிக் துண்டை விழுங்கியிருக்கிறான். நல்லவேளை சரியான நேரத்துக்கு வந்தீர்கள். இல்லையெனில் குழந்தை உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்' என்றார். 


விஷயமறிந்த வாசுஅன்று மாலையே வந்துவிட்டான். விஷயமெல்லாம் கேட்டு  அவளை கோபித்ததோடு  'தயவு செய்து இனிமேலாவது சுத்தமாக இரு' என்றான். சுனிதாவும் 'என்னை மன்னிச்சுடுங்க. நம் குழந்தை என்னை மாத்திட்டான்' என்றாள்.

கருத்துகள்