இழந்ததும் கற்றதும்..(22.2.'21)

இழந்த தருணங்களைத் யோசித்துப் பார்த்தும்..

ம்ஹும்..எதுவும் கிட்டவில்லை..எழுதவும் எட்டவில்லை!

கற்றவை நிறைய்...ய!
என் சிறு வயது முதலே நான் எதற்கும் ஆசைப்பட்ட
தில்லை.என் பெற்றோர் வளர்த்த விதத்தில் எல்லாமே அவ்வப்பொழுது கிடைத்தது!

நல்ல மதிப்பெண்கள் பெற்றும்
பள்ளியிறுதி முடித்து கல்லூரி சென்று பட்டதாரியாகி வேலைக்கு செல்லும் ஆசை மனதின் ஓரமாக..!
அது ஒன்றே நான் இழந்தது.

அம்மா அப்பாவுக்கோ அது தேவையில்லை என்று பட்டதால் நானும் ஏற்றுக் கொண்டேன்! 18 வயதில் திருமணம் செய்து கடமையை முடிக்கும் ஆசை அப்பாவுக்கு!

அது தவறென்று எனக்கு தோன்றாததால் அவர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை என் கணவரானார்! அன்பான
ஆசையான கணவரின் விருப்பங்களை என் விருப்பங்களாக மாற்றிக் கொள்ள இன்று அவர் என் வசம்!

அம்மாவாக இருப்பார் என்று நான் கற்பனை செய்திருந்த என் மாமியார் ஒரிஜினல் மாமியாராக  இருந்தபோது (நான்தான் தப்புக் கணக்கு போட்டு விட்டேனோ!) அதை ஏற்றுக் கொண்டு அவர் கோபித்தாலும், என்ன குறை சொன்னாலும் நான் வாய்மூடி இருக்கப் பழகினேன்..!

அதன் பலனாக பல நல்ல விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். சமையல் வீட்டு நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றேன்! யார் உதவியும் நாடாமல் எந்தக் காரியமும் செய்யக் கற்றுக் கொண்டேன்.

அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சொல்லித்தர நானும் நிறைய படித்தறிந்தேன். அவர்களின் பாடங்கள், பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிக
ளுக்கு அவர்களை தயார் செய்தபோது என் அறிவையும் பெருக்கிக் கொண்டேன். ஹிந்தி என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான் என் குழந்தைகள் ஹிந்தி கற்றபோது நானும் கற்றேன்.

என்னுள்ளிருந்த எழுத்துத் திறமை, பாட்டு, தையல்,ஓவியம், கைவேலைகள் இவற்றில் என் திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன்! தமிழில் ஆர்வமுள்ள நான் அன்றைய பெண்கள் இதழ்களான மங்கை, சுமங்கலி, மங்கையர் மலர்,ஞான பூமி போன்ற இதழ்களில் பல கட்டுரைகள் எழுதி  வெளியாகியதோடு
தற்போது வெளியாகும் பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் இரண்டு பிள்ளைகள் முதுகலை பட்டம் பெற்ற பொறியாளர்கள்.ஒரு மகன் முதுகலை வணிகம் படித்தவன். என் மகள் மருத்துவர். நான்கு குழந்தைகளும் சிறப்பான துறைகளில் மேன்மையடைய நான் அளவிலா பெருமை
யடைந்தேன்!

இன்று நான்கு குழந்தைகளுடன் அவர்கள் துணைகளுமாக எட்டு குழந்தைகளுடனும்,  பேரன் பேத்திகளோடும்  என்  நேரங்களை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்!

ஒரு வெளிநாடாவது பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட நான் பல  நாடுகளை சுற்றிப் பார்த்து என் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன்!

எனக்குக் கிடைத்த எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்வை இயல்பாக இறைவன் கொடுத்த வரமாக எண்ணி வாழும்போது என் எந்தத் தருணத்தையும் வீணே இழக்கவில்லை என்று மனமகிழ்ச்சி கொள்கிறேன்!

குறைவில்லாத குறையில்லாத வாழ்வு அன்றும் இன்றும்..!
இந்த இனிமையான வாழ்வுக்
காக நான் இறைவனுக்கு சொல்லும் நன்றிகள் கணக்கற்றவை!

நான் தூங்கும்போதும்  வேறு எண்ணங்களில் மூழ்கியும் அந்த ஈசனை எண்ணாத நேரங்களே நான் இழந்த தருணங்கள்! இந்த வாழ்வு இறுதிவரை தொடர இறை
யருளை வேண்டுகிறேன்🙏🏼

கருத்துகள்