உண்மைக் காதல் மாறாது(1)(27.2.'21)

எனக்கு ஒரு பெண்..மூன்று பிள்ளைகள். பெண் டாக்டர். அவள் பத்தாம் வகுப்பு முடித்ததும்  என் கணவருக்கு கோலாப்பூர் மாற்றலாகிவிட அங்கு +2 முடித்து  மும்பையில் Grant Medical Collegeல் MBBS படித்தாள். நாங்களும் மும்பை சென்று விட்டோம். அவளுக்கு திருமணத்திற்கு பார்க்கலாம் என நாங்கள் யோசித்தபோது தனக்கு டாக்டர் பையன்தான் சரிவரும் என்றாள். நாங்கள் பார்த்தவரை இன்ஜினியர் வரன்களே அதிகம் வந்தது. Matrimonialலும்  டாக்டர்கள் அதிகம் இல்லை.

இரண்டாம் வருடம் படித்தபோது, தான் ஒரு சீனியர் பையனை விரும்புவதாக சொன்னாள். நாங்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. என் கணவர்...குழந்தைகளுக்கு படிப்பைக் கொடுத்திருக்கிறோம். அவர்கள் சரியான முடிவுதான் எடுப்பார்கள்...என்பார். 

பையனைப் பார்க்க வேண்டும் என்றபோது அவளே அழைத்து வந்து அறிமுகப் படுத்தினாள். மராட்டிய பையன். பார்க்க நன்றாக இருந்ததோடு மிக அமைதியாக மரியாதையாகப் பேசினான். அவர்கள் குடும்பம் பற்றி சொன்னதுடன் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர்கள் வீட்டார் ஒப்புக் கொள்வார்கள் என்றான். எங்களுக்கெல்லாம் ஹிந்தி தெரிந்ததால் அவனுடன் பேச முடிந்தது. 

அவனுக்கு இவள் தமிழ்ப் பெண் என்பதோடு இவளின் நீண்ட தலைமுடி, பளிச்சென்ற பேச்சு, உயரம் (இருவரும் ஒரே உயரம்)எல்லாம் பிடித்துப் போய்தான் இவளை propose செய்தானாம்!

எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. முதலில் மொழிபிரச்னை. (இப்போது மராட்டியில் கவிதை எழுதும்வரை தேறிவிட்டாள்!) பின் அவர்கள் பழக்க வழக்கங்கள் வித்யாசமானது. இவளுக்கு சரிவருமா என்று நான் (என் கணவருக்கு பெண் மேல் அதீத நம்பிக்கை. அவர் கவலைப்படவில்லை!) பயப்பட, அவளோ...நீங்கள் பார்த்த பையனுடன் சிறிது நேரமே பேசி முடிவு செய்து கல்யாணம் பண்ணிக் கொண்டால் பின்னால் பிரச்னைகள் வராதா? என்னை விரும்பும் ஒருவனோடு என்னால் அட்ஜஸ்ட் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ முடியும்..என்றாள்.

அன்று மாலையே அவன் பெற்றோர் எங்களுடன் பேசி தம் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தார்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள். பெண்களுக்கு திருமணமாகி விட்டது. இவன் மூன்றாவது பிள்ளை.

எங்களுக்குள் பரஸ்பரம் பிடித்துவிட இருவரும் சம்பந்தி ஆகிவிடலாமென முடிவு செய்தோம்! 

என் பெண், மாப்பிள்ளையிடம்.நீங்கள் இருவரும் இணைந்து வாழ முடியுமா? பின்னால் ஏதாவது பிரச்னை வந்தால் எங்களிடம் வரக்கூடாது. அந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து வைப்போம்...என்றோம். அவர்களும் கண்களில் காதலுடன் ஒப்புக் கொண்டார்கள்!

அவர்களிடம் திருமணம் எப்படி செய்வது சீரெல்லாம் என்ன செய்வது எனக்கேட்டபோது,

எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீங்கள உங்கள் முறைப்படி செய்வதுபோல் நாங்களும் எங்கள் முறையில் திருமணம் செய்ய விரும்புகிறோம் என்றனர். எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. 

என் பெண் படிப்பு முடித்ததும்  திருமணம் நடந்தது.  நாங்கள் எங்கள் ஆசைப்படி பெண் மாப்பிள்ளைக்கு டிரஸ், நகை, வெள்ளி சாமான்கள் பரிசாகக் கொடுத்தோம். அவர்களும் என் பெண்ணுக்கு  அவர்கள் முறைப்படி கருகமணி தாலி, தங்க செயின், வளையல் என செய்தனர். என் மூன்று பிள்ளைகளுக்கும் அவர்கள் மோதிரம் போட்டது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.எந்த மனக்கசப்புகளும், விதண்டாவாதங்களும் இன்றி மிக விமரிசையாக திருமணம் நடந்தது. 

அதன்பின் சில மாதங்களில் என் பெண் அவர்கள் வீட்டு பழக்க வழக்கங்கள் சமையல் முறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு செய்வதாக அவள் மாமியார் பாராட்டினார். மாமியார் மாமனார் மிகவும் நல்லவர்கள். எந்த விஷயமும் இவளுடன் ஆலோசித்தே செய்வார்கள். அவளுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் முடிந்து விட்டது. 

ஒரு பேரன் 9ம் வகுப்பும், பேத்தி நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள். இன்றுவரை இருவரும் அதே காதலுடனும், பாசத்துடனும் பெரியவர்களிடம் மரியாதையோடும் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது என் மகள் ஒரு சிறந்த  கணவரைத் தேர்ந்தெடுத்து நல்ல குடும்பத்தில் சிறப்பாக வாழ்வது பெருமையாக உணர்கிறேன். 


கருத்துகள்