திருமணத்திற்கு பின் காதல்!(12.2.'21)

காதலர் தினம் ஒருநாள் மட்டுமா! ஒவ்வொரு நாளும் காதலர் தினமானால் தாம்பத்தியம் மணக்கும்..இனிக்கும்..!


திருமண வாழ்வில் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எனக்கும், என் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேற்றுமைகள், பிணக்குகள் வருவதுண்டு. ஆனால், சில மணி நேரங்கள் கூட தாக்குப் பிடிக்க விட்டதில்லை. எங்களுக்குள் இருக்கும் காதல் பார்வைகள், ஆதரவான அணைப்பு, ஒரு நாளும் விட்டுப் பிரிந்திருக்க முடியாத மனப்பான்மை, சிறு தலைவலி என்றால்கூட பதறிவிடும் தன்மை, விட்டுக் கொடுத்து வாழ்வது இவையே எங்களின் மாறாத காதல் வாழ்க்கையை நடத்திச் செல்லும் மகத்தான காரணங்கள்!

எத்தனை ஆண்டு ஆனாலும் 'இன்று புதிதாய் திருமணம் செய்து கொண்டோம்' என்கிற மாதிரி வாழ நான் கடைப்பிடிக்கும் சில எளிய வழிகள்..

அடிக்கடி அணைப்பதும், முத்தமிடுவதும் காதலை அதிகரிக்கச் செய்யும்!

தொடுதல் உணர்வு இருவருக்கிடையேயுள்ள நெருக்கத்தை அதிகரிக்கும். அடிக்கடி தொட்டுப் பேசுவது, தடவுவது, வெளியில் செல்லும்போது கைப்பிடித்துச் செல்வது வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்! ‘உம்’மென்றில்லாமல் உற்சாகமாய்ப் பேசுங்கள்!

உங்கள் துணையின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்காதீர்கள். குறையில்லாத மனிதரே கிடையாது. கணவர் அவிழ்க்கும் உடைகளை அங்கங்கு வீசிவிட்டுப் போகிறவரா? அவரிடம், அதனால் உங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை எடுத்துச் சொல்லி, நிறைய ஹேங்கர்களை வாங்கிக் கொடுத்து மாட்டச் சொல்லி சொல்லுங்கள். மாற்றம் நிச்சயம் ஏற்படும்!

கோபமாக இருக்கும்போது எதுவும் பேசாதீர்கள். உடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று, வேறு வேலையில் ஈடுபடுங்கள். வார்த்தைகள் தடித்து மனம் காயப்பட்டால், ரணங்கள் எளிதில் ஆறாது.

துணையின் ரகசியங்கள், பலவீனங்களை அடிக்கடி சொல்லிக் காட்டாதீர்கள்! துணையின் செயல்களை அடுத்தவர் எதிரில் உங்கள் பெற்றோர், துணையின் பெற்றோர், நண்பர்கள் யார் எதிரிலும் விமரிசிக்க வேண்டாம்.

துணையின் விருப்பங்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அதில் சற்று ஈடுபாடு கொள்ளுங்கள். அவரும் உங்கள் விருப்பங்களை மதிப்பார்.

மறந்தும் மரியாதை தவறி உங்கள் துணையைப் பேசாதீர்கள். உங்கள் துணையைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு அவர் மேலுள்ள அன்பையும், காதலையும் பிரதிபலிப்பதாக இருக்கட்டும்!

இருவரும் சேர்ந்திருக்கும் நேரங்கள், சாப்பிடும் நேரங்கள், வாக்கிங் போகும் நேரமானாலும் அவற்றைக் கண்டிப்பாகத் தவறவிடாதீர்கள். பல வீடுகளில் மனைவிகள் மெகா சீரியலிலும், கணவர்கள் அலுவலக வேலையிலும்தான் ஆழ்ந்திருக்கிறார்கள். அதனால் இருவருக்கிடையேயுள்ள ஈடுபாடு குறைந்து தாம்பத்யம் அர்த்தமற்றதாகிறது.

மனம் விட்டு நிறைய பேசுங்கள்! தனிமையில் அமர்ந்து முதலிரவு பற்றியோ, முதல் குழந்தை பிறந்த அன்று ஏற்பட்ட சந்தோஷம் பற்றியோ பேசும்போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகும்.

துணையின் அழகை அடிக்கடி புகழ்வது தவறல்ல! அவரது வேலைத் திறமை, உடை அணியும் பாங்கு இவற்றை பாராட்டுங்கள்! உங்கள் மனதுக்கிசைவாய் நடந்து கொள்ளும் சமயங்களில் ‘ஐ லவ் யூ’வுடன் சேர்த்து ‘தேங்க்யூ’வும் சொல்லுங்கள்! பிறகு உங்கள் துணை வானத்தில் பறப்பார்! அதேபோல், தவறை சுட்டிக் காட்டும்போது மன்னிப்புக் கேட்கவும் மறக்காதீர்கள்!

வயதாகிவிட்டால் செக்ஸூம், ரொமான்ஸூம் தேவையில்லை என்று தவறாக எண்ணாதீர்கள். காதலை அதிகரிக்க காமமும் அவசியமே! மிதமான அலங்காரத்துடன் பளிச்சென்றிருங்கள்!

அன்பான தாம்பத்தியத்துக்கு முதல் எதிரி ஈகோ. அதை விரட்டி விட்டுக் கொடுத்து, பேச்சில் பண்பையும், பாசத்தையும் கண்களில் காதலையும் கூடுதலாக்குங்கள்! உங்கள் தாம்பத்யம் அன்றலர்ந்த மலராக புத்துணர்வோடு இருக்கும்! அனைவரின் பாராட்டையும் ஏன் பொறாமையையும்கூட பெறும்!


கருத்துகள்