என் எண்ணம்..என் எழுத்து! பல மொழிகளும் என் அனுபவமும்!(1)

ஆயி மாஜி ஆயி(1)


நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். என் கணவரும் தஞ்சை. என் அப்பாவின் வேலை நிமித்தம் நாங்கள் இருந்ததும், நான் படித்ததும் சிங்காரச் சென்னை!எனக்கு தஞ்சைத் தமிழும் சென்னைத் தமிழும் மட்டுமே தெரியும்!

மணமான ஆறு மாதத்திலேயே வங்கி அதிகாரியான என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்!‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும், ஏகப்பட்ட பிரமிப்போடும், சில இந்திப் புத்தகங்களோடும் பயணமானேன். படித்தபோது இந்தி தேவையில்லை என்று போராட்டம் நடந்ததால் இந்தியில் 'ஆனா..ஆவன்னா' கூடத் தெரியாது!

என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ஒளிந்து ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்!
எனவே அவருக்குக் கவலையில்லை!

நாங்கள் குடியிருந்த வீட்டு வாசல் கதவை யாராவது தட்டினால் எங்கள் வீட்டு சொந்தக்காரி 'ஆரய்யூ' என்பாள். அதைக் கேட்டு நானும் என் கணவர் அழைத்தபோது அப்படி சொல்ல 'இது என்ன பாஷை? என்ன அர்த்தம்?' என்றார். நானும் வீட்டுக்கார பெண் சொன்னதை சொல்ல அவரோ 'அது ஆரய்யூ இல்ல. ஆ ரஹி ஹும் என்று சொல்ல வேண்டும்' என்றார்!

அவரது நண்பர்களை 'தும்' என்று சொல்ல, 'அது ஒருமை. மரியாதையாக ஆப்னு சொல்லு' என சொல்லிக் கொடுத்தார்!

ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டு ‘பார்ட்டி’க்கு என் கணவர் அழைத்துப் போக, அங்கு வந்த அத்தனை பெண்களும் ஒரு மதராஸிப் பெண்ணான என்னை அதிசயமாகப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்க அச்சா , மாலும்நஹி என்ற இரண்டு வார்த்தைகளோடு அசடு வழிந்தேன்!

என் கண்கள் என்னவரைத் தேட அவரோ அனைவருடனும் அமர்க்களமாகப் பேசிக் கொண்டிருந்தார்.சே.. என்ன மொழி அது? ‘க’வில் நான்கு வகை, ‘ச’வில் இரண்டு, ‘ட’ வில் நாலு என்று #போதுமடாசாமி என்றாகி விட்டது!

நம் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த உச்சரிப்பு பிரச்னை படாபேஜார் தான்! இந்தியில் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள்,
பறவைகள் மற்றும் பொருட்களுக்கும் கூட ‘பால்’ உண்டு. பானி  (தண்ணீர்), மிட்டி (மண்), தஹி (தயிர்) இவை பெண்பால்! தூத்  (பால்), பத்தர் (கல்) இவை ஆண்பால். குத்தா என்றால் ஆண் நாய்! குத்தி என்றால் பெண் நாய்!

இப்படித் திண்டாடி, தட்டுத் தடுமாறிப் பேசி இந்தி கற்றுக் கொள்வதற்குள் என் கணவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல்!எனக்கு படு சந்தோஷம்!

இனி 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று சந்தோஷமாக பேசிப் பாடி வாழலாம் என்று நினைத்தேன். பத்து வருடங்கள் சிவகாசி, மதுரை, குடந்தை, ஈரோடு, குன்னூர் என்று பல மாவட்டங்களில் வாசம்! சுந்தரத் தமிழை நானும் சுவைத்து என் குழந்தைகளும் நல்ல தேர்ச்சி பெற்றார்கள். நான் எழுதிய பல கதை, கட்டுரைகள் சமையல் குறிப்புகள் மற்றும் வார மாத இதழ்களில் வெளியாகும் பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றேன். மீண்டும் வடநாட்டுக்கு மாற்றல் வரலாமென்ற எண்ணத்தில்
என்  குழந்தைகளுக்கு
இந்தியைக் கற்றுக் கொடுத்து எல்லாரும் பிரவீண் வரை முடித்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)